ஆஜராக தாமதமாக வந்த நடிகை பவித்ரா - பாடம் புகட்டிய போலீஸ் கமிஷனர்
|காலை 7 மணிக்கு நடிகை பவித்ரா கவுடா போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும்.
பெங்களூரு,
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாச தகவல் அனுப்பி தொல்லை கொடுத்ததாக நடிகர் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகளால் படுகொலை செய்யப்பட்டார். தனது தோழியான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச படங்களை அனுப்பியதால் நடிகர் தர்ஷனே ரேணுகாசாமியை கொடூரமாக தாக்கியதாகவும், அதில் அவர் இறந்துபோனதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 19 பேரும் பெங்களூரு அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் பவித்ரா கவுடா மட்டும் தினமும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை போலீஸ் நிலையத்தில் இருப்பார்.
அதன் பிறகு அவர் பெண்கள் பாதுகாப்பு விடுதிக்கு சென்றுவிடுவார். அதுபோல் அவர் பெண்கள் பாதுகாப்பு விடுதியில் தங்க சென்று விட்டார். ஆனால் வழக்கமாக காலை 7 மணிக்கு அவர் எழுந்து போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும். ஆனால் அவர் காலை எழுந்திருக்க தாமதம் ஆனது. இதனால் அவர் தாமதமாகவே போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.
இதை கேள்விபட்ட போலீஸ் கமிஷனர் தயானந்த், பவித்ரா கவுடாவை எச்சரித்தார். மேலும் வழக்கமாக நடிகை என்பதால் போலீஸ் நிலைய பெஞ்சில் இருக்க அனுமதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் தாமதமாக வந்ததால் தரையில் இருக்க வைத்ததாகவும் தெரிகிறது. அதாவது தாமதமாக போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு ஆஜராக வந்ததால், போலீஸ் கமிஷனர் நடிகைக்கு பாடம் புகட்டியதாக சொல்லப்படுகிறது.