< Back
தேசிய செய்திகள்
காசோலை மோசடி வழக்கு நடிகர் அஸ்வத் நிஷாம் கைது
தேசிய செய்திகள்

காசோலை மோசடி வழக்கு நடிகர் அஸ்வத் நிஷாம் கைது

தினத்தந்தி
|
10 July 2023 2:07 AM IST

காசோலை மோசடி வழக்கில் நடிகர் அஸ்வத் நிஷாமை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:-

கன்னட திரைஉலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நிஷாம் அஸ்வத். இவர் ரசிகர்களால் அஸ்வத் நிஷாம் என்று அழைக்கப்படுகிறார். இந்த நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த ரோகித் என்ற விவசாயியிடம் பசுமாடுகளை ரூ.1½ லட்சத்துக்கு வாங்கினார். அதற்கான பணத்தை காசோலையாக கொடுத்தார். அதை வங்கியில் செலுத்தி ரோகித் பணமாக மாற்ற முயன்றார். அப்போது அந்த காசோலை, நடிகர் அஸ்வத் நிஷாமின் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்பியது. இதையடுத்து அவர் இதுபற்றி ஹாசன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் அஸ்வத் நிஷாமை நேரில் ஆஜராக கூறி நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அவர் ஆஜராகவில்லை. அதையடுத்து 4 முறை பிடிவாரண்டு பிறப்பித்தார். அப்போதும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து 5-வது முறையாக நீதிபதி, நடிகர் அஸ்வத் நிஷாமுக்கு பிடிவாரண்டு பிறப்பித்தார். இதையடுத்து ஹாசன் படாவனே போலீசார் அஸ்வத் நிஷாமை கைது செய்து நேற்று முன்தினம் ஹாசன் கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது விவசாயிக்கு கொடுக்க வேண்டிய பணத்தில் 25 சதவீதத்தை தற்போது கொடுத்து விடுவதாகவும், மீதிப்பணத்தை சில நாட்களில் கொடுத்து விடுவதாகவும் கூறினார். மேலும் 25 சதவீத பணத்தை உடனடியாக ஒப்படைத்தார். இதையடுத்து நீதிபதி நடிகர் அஸ்வத் நிஷாமுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இந்த சம்பவம் கன்னட திரைஉலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்