கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; பெற்றோர் அனுமதியின்றி மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது - மத்திய பிரதேசத்தில் சுற்றறிக்கை
|புகார்கள் எழுந்தால் பள்ளி நிர்வாகத்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்ட கல்வித்துறை சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், எதிர்வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பெற்றோர் அனுமதியின்றி மாணவர்களை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபடுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்களிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெறாமல் மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் மரம் போன்ற வேடங்களை அணிவிக்கக் கூடாது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான புகார்கள் ஏதேனும் தெரியவந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரி விவேக் துபே கூறுகையில், "பள்ளிகளில் நடைபெறும் பண்டிகைக்கால கொண்டாட்டங்களை தடை செய்யுமாறு கூறவில்லை. கடந்த காலங்களில் பெற்றோர் அனுமதியின்றி குழந்தைகளை இதுபோன்ற கொண்டாட்டங்களில் ஈடுபடுத்தியதாக புகார்கள் வந்துள்ளன. அதனை தவிர்க்கவே இந்த ஆண்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.