சட்டவிரோத செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் - மந்திரி பைரதி சுரேஷ்
|கோலாரில் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு மந்திரி பைரதி சுரேஷ் உத்தரவிட்டுள்ளார்.
கோலார் தங்கவயல்:-
மந்திரி தலைமையில் ஆலோசனை
கோலாரில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட பொறுப்பு மந்திரி பைரதி சுரேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் எம்.எல்.ஏ.சம்ரத்தி மஞ்சுநாத், பங்காருபேட்டை எம்.எல்.ஏ.நாராயணசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது ஜனதா தளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ. சம்ரத்தி மஞ்சுநாத் பேசியதாவது:-கோலார் தங்கவயலில் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் அரசு நிலங்களை அபகரிப்பவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டனர். தற்போதும் அதே நிலைதான் நீடித்து வருகிறது. இது மாறவேண்டும். எனவே மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து நாராயணசாமி எம்.எல்.ஏ. பேசும்போது:-கல்குவாரி செயல்படுவதற்கு 10 மீட்டர் அனுமதி வழங்கினால், தொழில் அதிபர்கள் 100 மீட்டர் தோண்டிவிடுகின்றனர். அந்த அளவிற்கு நில அபகரிப்பு நடந்து வருகிறது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்
இதை கேட்ட மந்திரி பைரதி சுரேஷ் பேசியதாவது:-கோலார் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுவரை சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரிகளிடம் இருந்து ரூ.43 கோடி வரை அபராதம் வசூல் செய்யவேண்டியுள்ளது. ஆனால் அதிகாரிகள் அந்த பணத்தை வசூல் செய்யவில்லை. மேலும் கல்குவாரிகள் உரிமையாளர்களுடன் கைகோர்த்து கொண்டு சட்டவிரோதமாக கற்கள் ஏற்றி செல்வதற்கு அனுமதி வழங்குகிறார்கள்.
இதுகுறித்து தகவல் எனக்கு கிடைத்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே தங்கள் நடவடிக்கையை மாற்றி கொள்ளவேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த மாத இறுதிக்குள் அபராத தொகையை கல்குவாரி உரிமையாளர்களிடம் இருந்து வசூல் செய்யவேண்டும்.