அரசு உத்தரவை செயல்படுத்தாத என்ஜினீயரிங் கல்லூரிகள் மீது நடவடிக்கை; அதிகாரிகளுக்கு, கலெக்டர் ராஜேந்திரா உத்தரவு
|அரசு உத்தரவை செயல்படுத்தாத என்ஜினீயரிங் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு, கலெக்டர் ராஜேந்திரா உத்தரவிட்டுள்ளார்.
மங்களூரு;
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி முதல்வர்களுடன் கலெக்டர் ராஜேந்திரா ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தின்போது அவர் பேசியதாவது:-
கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தட்சிண கன்னடா, உடுப்பி, குடகு, சிவமொக்கா போன்ற மாவட்டங்களில் மழைபாதிப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மாவட்டத்தில் உள்ள சில கல்லூரிகள் அரசு அறிவிப்பை மதிக்காமல், கல்லூரிகளை திறந்து வைத்துள்ளதாக புகார்கள் வருகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது, மாணவர்களின் பாதுகாப்பை கருதிதான். அவர்கள் கல்லூரிக்கு வரும்போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதை மதிக்காமல், தனியார் கல்லூரிகள் பல மாணவர்களை வலுக்கட்டாயமாக வகுப்புகளுக்கு வர வற்புறுத்துகின்றன. அதிலும் குறிப்பாக என்ஜினீயரிங் கல்லூரிகள் அரசின் உத்தரவை செயல்படுத்தாமல் உள்ளன. அந்த கல்லூரிகள் மீது உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.