ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்னுரிமை: பிரதமர் மோடி
|‘நிதிஆயோக்’ ஆய்வின்படி, கடந்த 9 ஆண்டுகளில் 25 கோடி பேர், வறுமைக்கோட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று பிரதமர் மோடி கூறினார்.
அமராவதி,
பிரதமர் மோடி நேற்று ஆந்திர மாநிலத்துக்கு சென்றார். அமராவதியில் கட்டப்பட்ட தேசிய சுங்கம், மறைமுக வரிகள் அகாடமியை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் ஆகியோருக்கு மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது. 10 கோடி போலி பெயர்கள், ஆவணங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு அனுப்பும் ஒவ்வொரு காசும், சரியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் சேர்ந்து வருகிறது. ஊழலுக்கு எதிராகவும், ஊழல்வாதிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கு இந்த அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
முன்பெல்லாம் வெவ்வேறு வரிகளை புரிந்து கொள்ள சாமானியர்கள் திணறினர். வெளிப்படைத்தன்மை இல்லாததால், நேர்மையாக வரி செலுத்துவோரும், வணிகர்களும் தொல்லைகளை சந்தித்தனர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக வரி முறையில் எண்ணற்ற சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. ஜி.எஸ்.டி. என்ற பெயரில் நவீன வரிமுறை கொண்டுவரப்பட்டது. வருமான வரிமுறை எளிமைப்படுத்தப்பட்டது. இத்தகைய சீர்திருத்தங்களால், வரி வசூல் சாதனை அளவுக்கு உயர்ந்தது.
வரி செலுத்துவோரின் பணம் முறையாக பயன்படுத்தப்படுகிறது. அவர்களிடம் இருந்து பெறப்படும் பணம், அவர்களுக்கே வெவ்வேறு வழிகளில் திருப்பி தரப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், வரி சேமிப்புகள் மூலம் மக்கள் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடியை சேமித்துள்ளனர்.
'நிதிஆயோக்' ஆய்வின்படி, கடந்த 9 ஆண்டுகளில் 25 கோடிபேர், வறுமைக்கோட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். நல்லாட்சிக்கு உதாரணம், ராமர். இன்று நாடே ராம பக்தியில் மூழ்கி இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.