நடிகர் சல்மான் கானை குறிவைத்தோம் - பாடகர் சித்து மூஸ்வாலா கொலையில் தொடர்புடையவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
|சித்து மூஸ்வாலா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் நடிகர் சல்மான் கானை குறிவைத்து நோட்டமிட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
சண்டிகர்,
பஞ்சாபி பாடகரும், காங்., பிரமுகருமான சித்து மூஸ்வாலா, அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த மே 29 ஆம் தேதி மூஸ்வாலா தனது காரில் சென்று கொண்டிருந்த போது, அவரை பின் தொடர்ந்து வந்த கும்பல் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பஞ்சாபில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக ரவுடி லாரன்ஸ் பிஸ்னோய் மற்றும் கோல்டி பிரார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். டெல்லி திஹார் சிறையில் உள்ள நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் என்பவர், இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், போலீசார் லாரன்சை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
முன்னதாக அமிர்தசரஸ் அருகே நடந்த என்கவுன்டரில் பஞ்சாப் காவல்துறை, இருவரை சுட்டுக் கொன்றனர். கொலையில் தொடர்புடைய மூன்று பேரை டெல்லி காவல்துறை கைது செய்தது.
இந்த நிலையில், சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடைய கடைசி நபர் தனது கூட்டாளிகளுடன் நேற்று கைது செய்யப்பட்டார். அவர்களை அடுத்த 6 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்பாக பஞ்சாப் காவல்துறை டிஜிபி கவுரவ் யாதவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-
சித்து மூஸ் வாலா கொலைக்கு மூளையாக செயல்பட்ட லாரன்ஸ் பிஷ்னோய் அறிவுறுத்தலின் படி, சித்து மூஸ் வாலா மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், பாலிவுட் நடிகர் சல்மான் கானை குறிவைத்து மும்பையில் நோட்டமிட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முன்னதாக ஜூன் மாதம் அவருக்கும் அவரது தந்தை சலீம் கானுக்கும் மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. அதில் சலீம் கான் மற்றும் அவரது மகன் நடிகர் சல்மான் கான் ஆகிய இருவரும், கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸ்வாலாவின் கதியை விரைவில் சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
சல்மான் கானை குறிவைக்க, சம்பத் நெஹ்ராவுடன் இணைந்து ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. இது குறித்து மே 30ம் தேதி போலீசுக்கு தெரிய வந்தது.சித்து மூஸ் வாலா மரண வழக்கில் மொத்தம் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முழு விஷயத்தையும் விசாரிக்க 105 நாட்கள் ஆனது.
அரியானா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பதுங்கியிருந்தனர்.லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் சார்பாக சித்து மூஸ் வாலா கொலைக்கு கேங்க்ஸ்டர் கோல்டி பிரார் பொறுப்பேற்றார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக கென்யாவைச் சேர்ந்த ஒருவரும், அஜர்பைஜானைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.