ரூ.1,000 கோடிக்கு மேல் சொத்து குவிப்பு: கைதான தாசில்தாரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு
|ரூ.1,000 கோடிக்கும் மேல் சொத்து குவித்ததாக கைதான தாசில்தாரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூரு கே.ஆர்.புரம் தாசில்தாராக இருந்து வந்தவர் அஜித்குமார் ராய். இவர், பெங்களூரு கொடிகேஹள்ளி அருகே சககாரநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் லோக் அயுக்தா போலீசார் நடத்திய சோதனையில் ரூ.40 லட்சம் ரொக்கம், தங்க நகைகள், 10 சொகுசு கார்கள், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து பத்திரங்கள் சிக்கி இருந்தது. அவர் வருமானத்திற்கு அதிகமாகவும், சட்டவிரோதமாகவும் ரூ.1,000 கோடிக்கு மேல் சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டதால், தாசில்தார் அஜித்குமார் ராய் கைது செய்யப்பட்டு இருந்தார்.
அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு 7 நாள் காவலில் எடுத்து லோக் அயுக்தா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கார் பந்தயங்களில் பங்கேற்பதில் ஆர்வமாக இருந்ததும், பெங்களூருவில் பார்முலா ஒன் கார் பந்தயம் நடத்துவதற்காக மைதானம் அமைக்க பெங்களூரு புறநகரில் 100 ஏக்கருக்கு நிலம் வாங்கி இருந்ததும் தெரியவந்தது.
மேலும் ரியல்எஸ்டேட் தொழில் செய்ததுடன், கட்டுமான நிறுவன அதிபர்களுடன் தொடர்பு வைத்து கட்டிடங்கள், நிலங்களை வாங்கி குவித்ததும் தெரிந்தது. சட்டவிரோதமாக அவர் சொத்து சேர்த்திருப்பது தெரியவந்ததால், அஜித்குமார் ராய் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அஜித்குமார் ராய் சட்டவிரோதமாக சொத்து சேர்த்திருப்பது, அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது கிடைத்த சொத்து ஆவணங்கள் குறித்த தகவல்களை வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறைக்கு லோக் அயுக்தா போலீஸ் அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பொதுவாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாலோ, சட்டவிரோத பண பரிமாற்றம், பினாமி பெயரில் சொத்து சேர்த்தாலோ, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவது வழக்கம்.
அதன்படி, ரூ.1,000 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக சொத்து குவித்துள்ள அஜித்குமார் ராய் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. லோக் அயுக்தா போலீசார் அளித்துள்ள தகவல்களின் பேரில் இந்த முடிவை அதிகாரிகள் எடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.