புல்லட் மீது லாரி மோதிய விபத்தில் நடிகர் சிவராஜ்குமாரின் உறவினர் கால் துண்டிப்பு
|புல்லட் மீது லாரி மோதிய விபத்தில் நடிகர் சிவராகுமாரின் உறவினருடைய கால் துண்டிக்கப்பட்டது.
மைசூரு:
மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவின் சகோதரர் சீனிவாஸ். இவர் கன்னட திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவரது மகன் சுராஜ் என்ற துருவன். மைசூருவில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு புல்லட்டில் சென்று கொண்டிருந்தார். சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா பேகூர் வழியாக சென்று கொண்டிருந்தார். இந்தநிலையில் பேகூரில் உள்ள ஹரிகட்டே என்ற பகுதியில் சென்றபோது, எதிரே வந்த சரக்கு லாரி, இவரது புல்லட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுராஜின் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சுராஜை மீட்டு மைசூரு கே.ஆர்.பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர்கள் அவரது உயிருக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்று கூறிவிட்டனர். ஆனால் வலது காலில் முறிவு ஏற்பட்டதால் மீண்டும், அதை பொருத்த முடியாது என்று கூறிவிட்டனர். இதனால் காலை எடுக்கவேண்டும் என்று கூறினர். இந்தநிலையில் அவரது வலது காலை டாக்டர்கள் துண்டித்து எடுத்தனர். இந்த தகவல் அறிந்த கன்னட நடிகர் சிவராஜ்குமார், மைசூரு ெசன்று சுராஜின் உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும் சுராஜிற்கு அவர் ஆறுதல் கூறினார். இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து பேகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.