மோட்டார் சைக்கள் மீது பி.எம்.டி.சி. பஸ் மோதி வாலிபர்கள் 2 பேர் பலி
|மோட்டார் சைக்கள் மீது பி.எம்.டி.சி. பஸ் மோதி வாலிபர்கள் 2 பேர் பலியானார்கள்.
தாவரகெரே:
பெங்களூரு தாவரகெரே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கொள்ளர்கட்டி அருகே இந்திரா காலனியை சேர்ந்தவர் மஞ்சுநாத்(வயது 25). இவரது நண்பர் சிவராஜ்(29). இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றனர். அவர்கள் சாலையில் சென்றபோது, பின்னால் வந்த பி.எம்.டி.சி. ஏசி. பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தாவரகெரே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கே.ஆர்.புரம் பகுதியில் மாணவி ஒருவர் மீது பி.எம்.டி.சி. பஸ் மோதி உயிரிழந்த சம்பவம் நடந்தது.