< Back
தேசிய செய்திகள்
அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு
தேசிய செய்திகள்

அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு

தினத்தந்தி
|
6 Nov 2022 12:15 AM IST

பெங்களூருவில், அரசு பஸ் (கே.எஸ்.ஆர்.டி.சி.) மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் உயிரிழந்தார். பஸ் டிரைவர் தாக்கப்பட்டதால் பரபரப்பு உண்டானது.

பெங்களூரு:

பெங்களூருவில், அரசு பஸ் (கே.எஸ்.ஆர்.டி.சி.) மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் உயிரிழந்தார். பஸ் டிரைவர் தாக்கப்பட்டதால் பரபரப்பு உண்டானது.

வாலிபர் சாவு

பெங்களூரு ராஜாஜிநகர் பகுதியில் வசித்து வந்தவர் ரமேஷ்(வயது 36). இவர் தனது நண்பர்களுடன் வெளியே சென்று விட்டு நேற்று அதிகாலை 1.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.

டாக்டர் ராஜ்குமார் ரோட்டில் ரமேஷ் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது குக்கே சுப்பிரமணியாவில் இருந்து பெங்களூரு நோக்கி அரசு பஸ் (கே.எஸ்.ஆர்.டி.சி.) வந்து கொண்டு இருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் ரமேஷ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ரமேஷ் தலையில் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரமேசின் நண்பர்கள், பஸ் டிரைவரை பிடித்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்ததும் ராஜாஜிநகர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

டிரைவர் மீது தாக்குதல்

பின்னர் ரமேசின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ரமேசின் மோட்டார் சைக்கிளில் இருந்து மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குடிபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்து ரமேஷ் உயிரிழந்து விட்டதாகவும், ஆனால் தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறி கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் டிரைவர், ராஜாஜிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதுபோல அலட்சியமாக பஸ்சை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதாக டிரைவர் மீது ரமேசின் நண்பர்கள் ராஜாஜிநகர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகார்களின்பேரில் ராஜாஜிநகர் போக்குவரத்து மற்றும் ராஜாஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் ரமேஷ் குடிபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தாரா என்பது தெரியும் என போலீசார் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்