பேராசிரியர், பள்ளி ஆசிரியை விபத்தில் சாவு
|பெங்களூருவில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் பேராசிரியர், பள்ளி ஆசிரியை பலியானார்கள். படுகாயம் அடைந்த கல்லூரி மாணவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உல்லால்:
பெங்களூருவில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் பேராசிரியர், பள்ளி ஆசிரியை பலியானார்கள். படுகாயம் அடைந்த கல்லூரி மாணவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கல்லூரி பேராசிரியர்
பெங்களூரு ராயசந்திரா பகுதியை சேர்ந்தவர் நரசப்பா (வயது 51). இவர், கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இதுபோல், கெங்கேரி அருகே உல்லாலில் வசித்து வந்தவர் ரக்ஷா (வயது 21). இவர், தனியாருக்கு சொந்தமான மழலைகள் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 11.45 மணியளவில் நரசப்பா தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு புறப்பட்டார்.
அதுபோல், ரக்ஷா தனது நண்பரான சந்தனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றிருந்தார். உல்லால் அருகே நள்ளிரவில் வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், உல்லால் பகுதியில் உள்ள வளைவில் வைத்து நரசப்பாவின் மோட்டார் சைக்கிளும், சந்தனின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. மோதிய வேகத்தில் 3 பேரும் மோட்டார் சைக்கிள்களில் இருந்து தூக்கி வீசப்பட்டார்கள்.
அதிவேகமே காரணம்
இதில், நரசப்பா தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரக்ஷாவும் பரிதாபமாக இறந்து விட்டார். சந்தனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கிய 3 பேரும் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் சென்றது தெரியவந்து உள்ளது.
மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற சந்தன் கல்லூரி மாணவர் என்றும், அதிவேகமாக அவர் மோட்டார் சைக்கிளை ஓட்டியதே விபத்திற்கு காரணம் என்றும், அவர் மதுஅருந்திவிட்டு மோட்டார் சைக்கிளை ஓட்டினாரா என்பது குறித்து விசாரித்து வருவதாக துணை போலீஸ் கமிஷனர் சுமனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கெங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.