< Back
தேசிய செய்திகள்
அபிமன்யு யானைக்கு மணல் மூட்டை சுமக்கும் பயிற்சி
தேசிய செய்திகள்

அபிமன்யு யானைக்கு மணல் மூட்டை சுமக்கும் பயிற்சி

தினத்தந்தி
|
16 Sept 2023 12:15 AM IST

மைசூரு அரண்மனை வளாகத்தில் அபிமன்யு யானைக்கு மணல் மூட்டையை சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. முதல்கட்டமாக 350 கிலோ எடையை சுமந்து சென்றன.

மைசூரு

மைசூரு தசரா விழா

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இந்த தசரா விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்கட்டமாக தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு யானை உள்பட 9 யானைகள் வந்துள்ளன.

முதலில் 8 யானைகள் வந்த நிலையில், புலியை பிடிக்க சென்றிருந்த அர்ஜுனா யானையும் நேற்று முன்தினம் வந்து சேர்ந்தது.

மைசூரு அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள யானைகளுக்கு சத்தான உணவு வகைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தினமும் யானைகளுக்கு நடைபயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. யானைகளின் பாகன்களும் அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மணல் மூட்டை சுமக்கும் பயிற்சி

இந்த நிலையில், தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலத்தில் அபிமன்யு யானை சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்து அரண்மனை முதல் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தீப்பந்து விளையாட்டு மைதானம் வரை கம்பீர நடைபோட்டு செல்லும்.

தங்க அம்பாரி உள்பட சுமார் 1000 கிலோ வரை அபிமன்யு யானை சுமந்து செல்லும்.

இந்த நிலையில், அவ்வளவு எடையை சுமக்க யானைகளை பழக்கப்படுத்தும் வகையில் மணல் மூட்டைகளை சுமக்க வைத்து பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். அதேபோல், நேற்று தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு யானைக்கு மட்டும் மணல் மூட்டையை சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

கம்பீரமாக சென்றது

முதல்கட்டமாக அபிமன்யு யானைக்கு நேற்று 350 கிலோ எடை கொண்ட மணல் மூட்டையை சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த மணல் மூட்டைகளை சுமந்து அரண்மனை வளாகத்தில் அபிமன்யு யானை கம்பீரமாக நடந்து வந்தது.

அபிமன்யு யானைக்கு படிப்படியாக அதன் எடை அதிகரிக்கப்படும் என்றும், மரத்தால் ஆன அம்பாரியை சுமக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் மற்ற யானைகளுக்கும் மணல் மூட்டைகளை சுமக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்