< Back
தேசிய செய்திகள்
பா.ஜனதாவை வீழ்த்த தீவிரம்: பெங்களூருவில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்..!
தேசிய செய்திகள்

பா.ஜனதாவை வீழ்த்த தீவிரம்: பெங்களூருவில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்..!

தினத்தந்தி
|
17 July 2023 5:45 AM IST

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் பெங்களூருவில் இன்று (திங்கட்கிழமை) எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது.

பெங்களூரு,

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அதிகாரத்தை பிடிக்க பா.ஜனதா தனது வேலையை தொடங்கி விட்டது.

வலுவான கூட்டணி

ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் ஆகியோர் இதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டு வருகிறார்கள். இரு தலைவர்களும் மேற்கொண்ட முயற்சிக்கு காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்து உள்ளன.

முதல் கூட்டம்

இதனையடுத்து கடந்த மாதம் (ஜூன்) 23-ந் தேதி காங்கிரஸ், தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பீகார் தலைநகர் பாட்னாவில் கூடி ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அதில் நாடாளுமன்ற தேர்தலை ஓரணியில் திரண்டு எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அடுத்த கூட்டம் இமாசல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட சில காரணங்களால் அந்த கூட்டம் பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது.

பெங்களூருவிலும் முதலில் 13 மற்றும் 14-ந் தேதிகளில் இந்த கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த கூட்டத்தின் தேதி மீண்டும் மாற்றப்பட்டது.

சோனியா காந்தி விருந்து

அதன்படி எதிர்க்கட்சி தலைவர்களின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பெங்களூரு தாஜ் வெஸ்ட் எண்டு ஓட்டலில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இதையொட்டி இன்று மாலை 6 மணிக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடுகிறார்கள். அப்போது தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்களின் முக்கிய ஆலோசனை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடக்கிறது.

காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தேசிய மாநாட்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சிகர சமத்துவ கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (மாணி), மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட 24 கட்சிகள் பங்கேற்கின்றன.

24 கட்சி தலைவர்கள்

மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத்பவார், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சீதாராம் யெச்சூரி, தேசிய மாநாட்டு கட்சி சார்பில் உமர் அப்துல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன், ம.தி.மு.க. சார்பில் வைகோ, மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மெகபூபா முக்தி உள்பட 24 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தல்

எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும் ஓட்டலுக்கு முன்புறத்தில் தலைவர்களை வரவேற்கும் வகையில் அவர்களின் உருவ படங்கள் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளன. அந்த ஓட்டல் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

இதில் நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, கூட்டணிக்கு என்ன பெயர் சூட்டுவது, குறைந்தபட்ச பொது செயல் திட்டங்களை உருவாக்குவது, ஒருவேளை எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் பிரதமராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அடுத்த கூட்டம் நடைபெறும் தேதி மற்றும் இடம் ஆகியவை தற்போது நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.

முன்னதாக கூட்டம் நடைபெறும் ஓட்டலை முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அவசர சட்டம்

டெல்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வரும் அவசர சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்காதது குறித்து கெஜ்ரிவால் பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

இதனால்தான் அவர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் முடிந்ததும் யாரிடமும் கருத்து தெரிவிக்காமல் அங்கிருந்து சென்றிருந்தார். மேலும் அடுத்து நடைபெறும் கூட்டத்தை புறக்கணிக்க போவதாகவும் அறிவித்து இருந்தார்.

ஆம் ஆத்மியும் பங்கேற்கிறது

இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றுள்ளது. அதன்படி டெல்லி அரசின் நிர்வாக பணிகள் தொடர்பான மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்து உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்வதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

காங்கிரசின் இந்த அறிவிப்பு தொடர்பாக டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

இதில் அவசர சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து இருப்பதால், பெங்களூருவில் நடைபெறும் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. இந்த தகவலை கட்சியின் மூத்த தலைவர் ராகவ் சந்திரா நிருபர்களிடம் உறுதிப்படுத்தினார்.

எனவே பெங்களூரு கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்பது உறுதியாகி உள்ளது.

மேலும் செய்திகள்