மதுபான கொள்கை முறைகேடு: டெல்லி துணை முதல்-மந்திரியிடம் இன்று விசாரணை
|மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி துணை முதல்-மந்திரியிடம் இன்று விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட மதுபான கொள்கையில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாநில துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா மற்றும் சிலர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விவகாரத்தில் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோரின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே சோதனையும் நடத்தி இருந்தனர். இந்த நிலையில் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான விசாரணைக்கு இன்று (திங்கட்கிழமை) நேரில் ஆஜராகுமாறு மணிஷ் சிசோடியாவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
இதை அவரே தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறுகையில், 'இந்த பிரச்சினையில் எனது வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் 14 மணி நேரம் சோதனை நடத்தினர். ஆனால் எதுவும் கைப்பற்றவில்லை. எனது வங்கி லாக்கரை சோதித்தனர். அதிலும் எதுவும் கிடைக்கவில்லை. எனது கிராமத்தில் இருந்தும் அவர்கள் எதையும் எடுக்கவில்லை.
தற்போது என்னை சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்து இருக்கிறார்கள். நான் சென்று விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். வாய்மையே வெல்லும்' என கூறியிருந்தார். இந்த விவகாரம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.