< Back
தேசிய செய்திகள்
திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு அனுமதி மறுப்பு
தேசிய செய்திகள்

திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு அனுமதி மறுப்பு

தினத்தந்தி
|
28 April 2024 10:45 PM IST

அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவாலுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21-ந் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் உள்ள கெஜ்ரிவாலை அவரது மனைவி சுனிதா அவ்வப்போது சந்தித்து வருகிறார். அது மட்டுமல்லாது அமைச்சர்கள் மாநில முதல்-மந்திரிகள் ஆகியோர் கெஜ்ரிவாலை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவி சுனிதாவுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திகார் சிறை துறை அதிகாரிகளிடம் இருந்து எந்த வித மறுப்பு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தனது எக்ஸ் வலைதளத்தில், "மோடி அரசின் அறிவுறுத்தலின் பேரில், திகார் சிறை நிர்வாகம் சுனிதா கெஜ்ரிவாலின் கணவர் அரவிந்த் கெஜ்ரிவாலுடனான சந்திப்பை ரத்து செய்தது. மோடி அரசு, மனிதாபிமானமற்ற அனைத்து வரம்புகளையும் தாண்டி வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-மந்திரி ஒரு பயங்கரவாதியாக நடத்தப்படுகிறார். சுனிதா கெஜ்ரிவாலை அவரது கணவர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அனுமதிக்காதது ஏன் என்று நாட்டு மக்களுக்கு மோடி அரசு சொல்ல வேண்டும்." என்று அந்த பதிவில் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் செய்திகள்