< Back
தேசிய செய்திகள்
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு.. நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டத்திற்கு தயாராகும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள்
தேசிய செய்திகள்

கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு.. நாடு தழுவிய உண்ணாவிரத போராட்டத்திற்கு தயாராகும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள்

தினத்தந்தி
|
3 April 2024 1:02 PM IST

டெல்லி மாநில மந்திரிகள், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஜந்தர் மந்தரில் உண்ணவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

புதுடெல்லி:

டெல்லி மதுபானக் கொள்கை வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. விசாரணைக்குப் பின் ஏப்ரல் 15ம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தபடி அவர் தனது முதல்-மந்திரி பணிகளை கவனிக்கிறார்.

கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வகையில், வரும் 7-ம் தேதி நாடு முழுவதும் அக்கட்சியின் நிர்வாகிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதுதொடர்பாக கட்சியின் முக்கிய தலைவரும், டெல்லி மந்திரியுமான கோபால் ராய் கூறியதாவது:-

டெல்லி முதல்-மந்திரி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், ஏப்ரல் 7-ம் தேதி உண்ணாவிரதம் இருக்கலாம். உங்கள் வீட்டில், உங்கள் நகரத்தில் என எங்கு வேண்டுமானாலும் இந்த உண்ணாவிரத கூட்டத்தை நடத்தலாம்.

ஆம் ஆத்மி கட்சியை முடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சியின் உயர் தலைவரை கைது செய்திருக்கிறார்கள்.

டெல்லியில் மாநில அரசின் மந்திரிகள், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஜந்தர் மந்தரில் ஒன்றுதிரண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இது ஒரு திறந்த நிகழ்வாக இருக்கும். மாணவர் அமைப்புகள், விவசாய அமைப்புகள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்