நிர்பயாவுக்கு நீதி கேட்டவர்கள் இன்று குற்றவாளியை ஆதரிக்கின்றனர் - சுவாதி மாலிவால்
|ஒரு காலத்தில் நிர்பயாவுக்கு நீதி கேட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் இன்று குற்றவாளியை ஆதரிப்பதாக சுவாதி மாலிவால் தெரிவித்தார்.
புதுடெல்லி,
சுவாதி மாலிவால் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைது செய்யப்பட்டதற்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் கெஜ்ரிவாலுக்கு எதிராக பா.ஜனதா அரங்கேற்றி வரும் சதிக்கு சுவாதி மாலிவால் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுவதாகவும், சுவாதி மாலிவாலை மிரட்டி பா.ஜனதா இந்த செயலில் ஈடுபடுத்தி இருப்பதாகவும் அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து பேசிய சுவாதி மாலிவால், "ஒரு காலத்தில் நிர்பயாவுக்கு நீதி கேட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் இன்று குற்றவாளியை ஆதரிக்கின்றனர்" என சாடினார்.
மேலும் அவர், "அன்று நிர்பயாவுக்காக வீதிக்கு வந்தவர்கள், இன்று, 12 ஆண்டுகளுக்கு பிறகு, கண்காணிப்பு கேமரா காட்சிகளை மறைத்த குற்றவாளியை (பிபவ் குமார்) காப்பாற்ற வீதிக்கு வந்துள்ளனர். மணீஷ் சிசோடியாவுக்காக இவர்கள் இவ்வளவு சக்தியை பயன்படுத்தியிருக்கலாம். அவர் இங்கே இருந்திருந்தால் ஒருவேளை விஷயங்கள் எனக்கு மிகவும் மோசமாக இருந்திருக்காது" என கூறினார்.