காங்கிரசின் ஊழல் சாதனைகளை ஆம்ஆத்மி முறியடித்துள்ளது - பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா
|டெல்லியில் காங்கிரஸ் கட்சின் ஊழல் சாதனைகளை ஆம்ஆத்மி கட்சி முறியடித்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி மாநகராட்சிக்கு வருகிற டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, "ஆம் ஆத்மி கட்சி ஊழல்களின் கட்சியாக மாறியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அனைத்து ஊழல் சாதனைகளையும் முறியடித்துள்ளது.
டெல்லியில் நேர்மையான ஆட்சியை வழங்குவதாக கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி உறுதியளித்தது. ஆனால் கலால் துறையிலும், போக்குவரத்து துறைக்கு பஸ்கள் வாங்குவதிலும், கழிப்பறைகள் கட்டுவதிலும், டெல்லி நீர்வள வாரியத்திலும் ஊழல் செய்துள்ளது.
ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவேன் என்று முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியிருந்தார், ஆனால் ஆட்சி அமைத்த பிறகு எல்லா இடத்திலும் மதுக்கடைகளை திறந்துள்ளார்.
டெல்லி மாநகராட்சி தேர்தலும், அதன்பின் நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சியை பாஜக தோற்கடிக்கும். ஆம்ஆத்மி கட்சியின் ஊழல்களை பற்றி டெல்லி மக்களிடம் சொல்லுங்கள்." இவ்வாறு அவர் பேசினார்.