குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தவில்லை - போலீஸ் தரப்பில் விளக்கம்!
|ஆமதாபாத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தியதாக ஆம் ஆத்மி தலைவர் இசுதன் காத்வி கூறியுள்ளார்.
ஆமதாபாத்,
ஆமதாபாத்தின் நவரங்புரா பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் உள்ளூர் போலீசார் சோதனை நடத்தியதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் இசுதன் காத்வி கூறியுள்ளார்.
டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தீவிரம் காட்டி வருகிறார். குஜராத் பாஜகவின் கோட்டை என்று கூறப்படுகிறது ஆனால் இங்கு ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வர கடுமையாக உழைத்து வருகிறது.
இதனிடையே, குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் இசுதன் காத்வி டுவீட் செய்துள்ளார். ஆமதாபாத்தின் நவரங்புரா பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் உள்ளூர் போலீசார் சோதனை நடத்தியதாக கூறியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, "ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆமதாபாத் வந்தடைந்தார். அவர் ஆமதாபாத் வந்த சிறிது நேரத்தில் போலீஸ் சோதனை நடத்தப்பட்டது.போலீசார் இரண்டு மணி நேரம் தேடிவிட்டு சென்றுவிட்டனர். எதுவும் கிடைக்கவில்லை என்றால், மீண்டும் வருவதாக கூறினர்" என்று இசுதன் காத்வி டுவீட் செய்துள்ளார்.
இருப்பினும், இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ஆம் ஆத்மி அலுவலகத்தில் தாங்கள் சோதனை நடத்தவில்லை என்றும், அக்கட்சியின் டுவீட் மூலம் தான் இந்த சம்பவம் குறித்த தகவல்கள் கிடைத்து வருவதாகவும் போலீசார் தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஆமதாபாத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்ட செய்தி குறித்து கெஜ்ரிவால் கூறுகையில், "குஜராத் மக்களிடம் இருந்து வரும் அபரிமிதமான ஆதரவால் பாஜக கடும் அதிர்ச்சியடைந்துள்ளது. ஆம் ஆத்மிக்கு ஆதரவாக குஜராத்தில் புயல் வீசுகிறது. டெல்லிக்கு அடுத்து தற்போது குஜராத் ரெய்டு நடத்தப்பட்டது. டெல்லியில் எதுவும் கிடைக்கவில்லை, குஜராத்தில் எதுவும் கிடைக்கவில்லை."
இருப்பினும், ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டபோது, யார் இந்த சோதனைகளை நடத்தினர் மற்றும் சரியாக என்ன நடந்தது என்பது பற்றிய எந்த தகவலையும் அவர்கள் வழங்கவில்லை என்று கூறினார்.
நவரங்புரா காவல் நிலைய ஆய்வாளர் பி.கே.படேல் கூறும்போது, இதுபோன்ற சோதனைகள் எதுவும் நடத்தப்படவில்லை என்றார். "ரெய்டு தொடர்பான காத்வியின் டுவீட் பற்றிய தகவல் கிடைத்ததும், நான் ஞாயிற்றுக்கிழமை இரவு தனிப்பட்ட முறையில் கட்சி அலுவலகத்திற்குச் சென்று விவரங்களை கேட்டேன். ஆனால் அங்கு இருந்த யஜ்னேஷ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள், காத்வி கூறியது போல் யார் வந்தார்கள், உண்மையில் என்ன நடந்தது என்ற விவரம் எதுவும் தெரிவிக்கவில்லை" என்றார்.