விசாரணை நடந்தால், பட்டச்சான்றிதழ் 'போலி' என்று தெரிந்து விடும்: பிரதமர் மோடி எம்.பி. பதவியை இழப்பார் - ஆம் ஆத்மி
|பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் குறித்து விசாரணை நடந்தால், அது போலி என்று தெரிந்து, அவர் எம்.பி. பதவியை இழப்பார் என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் குறித்து விசாரணை நடந்தால், அது போலி என்று தெரிந்து, அவர் எம்.பி. பதவியை இழப்பார் என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் ஐகோர்ட்டு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
இந்நிலையில், அவரது ஆம் ஆத்மி கட்சி எம்.பி.யும், தேசிய செய்தித்தொடர்பாளருமான சஞ்சய்சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் என்று அமித்ஷா கடந்த 2016-ம் ஆண்டு ஒரு சான்றிதழை காண்பித்தார். அதில், 'யுனிவர்சிட்டி' என்ற ஆங்கில வார்த்தையின் எழுத்துகள் 'யுனிபர்சிட்டி' என்று தவறாக உள்ளது. அது போலி என்பதற்கு அதுவே ஆதாரம். பிரதமர் மோடியே கடந்த 2005-ம் ஆண்டு குஜராத்தில் பேசுகையில், பள்ளிக்கல்விக்கு பிறகு தன்னால் மேல்படிப்பு படிக்க முடியவில்லை என்றார். அவர் எம்.ஏ. படித்திருந்தால், அப்படி பேசியது ஏன்?
பிரதமரின் பட்டச்சான்றிதழ் பிரச்சினையை எழுப்பியவுடன், ஒட்டுமொத்த பா.ஜ.கவினரும் அதிர்ந்துள்ளனர். சான்றிதழ் போலி இல்லை என்று நிரூபிக்க போராடுகின்றனர். விசாரணை நடத்தப்பட்டால், பிரதமர் மோடியின் பட்டச்சான்றிதழ் 'போலி' என்று அம்பலமாகி விடும்.
பின்னர், தேர்தல் கமிஷனுக்கு தவறான தகவல் அளித்து மோசடி செய்ததாக அவர் தனது எம்.பி. பதவியை இழப்பார். அத்துடன், தேர்தலில் போட்டியிடும் தகுதியையும் அவர் இழந்து விடுவார். இதுதான் தேர்தல் கமிஷன் விதிமுறை.
இவ்வாறு அவர் கூறினார்.