< Back
தேசிய செய்திகள்
பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் ஆம் ஆத்மி முற்றுகை போராட்டம்; கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தம்
தேசிய செய்திகள்

பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் ஆம் ஆத்மி முற்றுகை போராட்டம்; கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தம்

தினத்தந்தி
|
19 May 2024 7:44 AM GMT

ஆம் ஆத்மி தலைவர்களான மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் மற்றும் சஞ்சய் சிங் ஆகியோரை சிறைக்கு அனுப்பும் விளையாட்டை பிரதமர் மோடி ஆடி கொண்டிருக்கிறார் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுவாதி மாலிவால், கடந்த 13-ந்தேதி காலை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக சுவாதி மாலிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக டெல்லி போலீசில் புகாரும் அளித்துள்ளார்.

அந்த புகாரில், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை ஏழெட்டு முறை கன்னத்தில் அறைந்ததாக சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார். மேலும், உன்னை கொன்று புதைத்துவிடுவேன் என மிரட்டி முகம், மார்பு, வயிறு மற்றும் உடலின் கீழ் பகுதிகளில் பிபவ் குமார் தாக்கியதாக சுவாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.

அவருடைய இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரை டெல்லி போலீசார் நேற்று கைது செய்தனர். கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்ற டெல்லி போலீசார், அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

இதற்கு பின்னணியில் பா.ஜ.க.வின் சதி உள்ளது என ஆம் ஆத்மி தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருகிறது. கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரும், மாலிவாலுக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், இது தேர்தல் நேரம்.

அதனால், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டு இருக்க கூடும். பா.ஜ.க.வினருடனான அவருடைய தொலைபேசி பதிவுகள், உரையாடல்கள் மற்றும் சாட்டிங்குகளை விசாரிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பின்னணியில் பா.ஜ.க. இருக்கும் சாத்தியம் உள்ளது என்றும் புகாரில் அவர் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், பா.ஜ.க. தலைமை அலுவலகம் நோக்கி இன்று ஆம் ஆத்மி கட்சியினர் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு உள்ளனர். இதனை கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார். ஆனால், முற்றுகை போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால், பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. போராட்டம் நடத்துவது பற்றி கெஜ்ரிவால் கூறும்போது, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களான மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் மற்றும் சஞ்சய் சிங் ஆகியோரை சிறைக்கு அனுப்பும் விளையாட்டை பிரதமர் மோடி ஆடி கொண்டிருக்கிறார்.

அவர்கள் எங்களுடைய கட்சியின் பின்னாலேயே வருகின்றனர். எங்களுடைய தலைவர்களை ஒருவர் பின் ஒருவராக சிறைக்கு அனுப்பி கொண்டிருக்கின்றனர். என்னுடைய தனி உதவியாளரை (பிபவ் குமார்) சிறைக்கு அனுப்பி விட்டனர் என கூறியுள்ளார்.

ஆம் ஆத்மியின் எம்.பி. ராகவ் சத்தா மற்றும் டெல்லி மந்திரிகளான அதிஷி மற்றும் சவுரப் பரத்வாஜ் ஆகியோரையும் சிறைக்கு அனுப்பி விடுவோம் என பா.ஜ.க.வினர் கூறி வருகின்றனர் என்றும் அவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார். இந்நிலையில், தடையை மீறி ஆம் ஆத்மி கட்சியினர் பா.ஜ.க. தலைமை அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட கெஜ்ரிவாலை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்