அரியானாவில் படுதோல்வியை சந்தித்த ஆம் ஆத்மி கட்சி
|அரியானா தேர்தல் முடிவில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் 90 பேரும் படுதோல்வி அடைந்துள்ளனர்.
சண்டிகர்,
அரியானா சட்டசபை தேர்தலில், 90 தொகுதிகளில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. 11 மணி நிலவரப்படி அரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், பாஜக 48 தொகுதிகளிலும், காங்கிரஸ் 36 தொகுதிகளிலும், முன்னிலையில் உள்ளன.
இந்தநிலையில், ஆம் ஆத்மி என்ற கட்சியின் 90 வேட்பாளர்களும் தொடக்கம் முதலே கடும் பின்னடைவில் இருந்தனர். பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களே முன்னிலை, பின்னடைவு என்று மாறி, மாறியே அரசியல் களம் இருந்தது. ஒரு தொகுதியில் கூட எங்கும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் முன்னிலையிலேயே வரவில்லை. 5 சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலை வகித்த நிலையில் ஆம் ஆத்மியின் சுவடே காணப்படவில்லை. அக்கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவிடப்பட்ட ஓட்டு எண்ணிக்கை நிலவரத்திலும் கூட அக்கட்சியின் வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. வெறும் 1.57 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளதாக பதிவிடப்பட்டு உள்ளன.
அரியானா சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் குறைந்த நாட்களிலேயே பிரசாரம் மேற்கொண்டதால் அவருடைய பிரசாரம் வாக்காளர்களை சென்றடைய தாமதமாகி விட்டதால் அக்கட்சி தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.