'பிரதமர் பதவிக்காக இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இணையவில்லை' - ராகவ் சத்தா எம்.பி.
|பிரதமர் பதவிக்கான போட்டியில் கெஜ்ரிவால் இல்லை என்று ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு உள்ளன. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பீகார் மாநிலம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் கடந்த மாதம் கர்நாடக தலைநகர் பெங்களூருவிலும் நடந்தது. பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர் சூட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து 'இந்தியா' கூட்டணியின் 3-வது கூட்டம் மராட்டிய தலைநகர் மும்பையில் இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் உள்ள கிராண்ட் ஹயாத் ஓட்டலில் கூட்டம் நடைபெறுகிறது.
இதனிடையே இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து அந்த கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களிடம் தொடர்ந்து கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா இது குறித்து பேசுகையில், "பிரதமர் பதவிக்காக இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி இணையவில்லை. பிரதமர் பதவிக்கான போட்டியில் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லை. சிறந்த இந்தியாவுக்கான திட்டத்தை தயாரிப்பதற்காகவே நாங்கள் இந்தியா கூட்டணியில் இணைந்துள்ளோம்.
பிரதமர் பதவிக்காக ஆம் ஆத்மி இந்தியா கூட்டணியில் சேர்ந்துள்ளது என்று யாராவது சொன்னால், பிரதமர் பதவிக்கு நம்மிடம் பல திறமையான முகங்கள் உள்ளன என்று அர்த்தம். பல முக்கியத் தலைவர்கள் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றனர்.
அடுத்த பிரதமராக நிதின் கட்கரி, யோகி ஆதித்யநாத் அல்லது சிராக் பாஸ்வானின் கட்சியைச் சேர்ந்த யாரேனும் ஒருவர் வர வேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள் பா.ஜ.க.வில் யாராவது இருக்கிறார்களா? அவர்களது கட்சியில் இந்த மாதிரியான எண்ணத்தைக் கூட யாராலும் வெளிப்படுத்த முடியாது" என்று ராகவ் சத்தா எம்.பி. தெரிவித்தார்.