நாடாளுமன்றத்திற்கு தக்காளி மாலை அணிந்து வந்த ஆம் ஆத்மி எம்.பி. சுஷில் குப்தா
|மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க தக்காளி மாலை அணிந்து வந்ததாக சுஷில் குப்தா தெரிவித்தார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி வாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சுஷில் குப்தா, இஞ்சி மற்றும் தக்காளி மாலை அணிந்து, நாடாளுமன்றத்துக்கு நேற்று வந்தார்.
அப்போது அவருக்கு அருகில் இருந்த எம்.பி.க்கு பேச வாய்ப்பு கிடைத்தது. அவர் எழுந்து பேசு ஆரம்பித்ததும், சுஷில் குப்தா தான் அணிந்து வந்த இஞ்சி, தக்காளி மாலையை எடுத்து அவருக்கு அருகில் கேமரா முன் காண்பித்தார். இதற்கு மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் அதிருப்தி தெரிவித்தார்.
பின்னர் இதுகுறித்து சுஷில் குப்தா கூறுகையில், "பணவீக்கத்தால் நாடே எரிந்து கொண்டு இருக்கிறது. ஆனால் தேர்தல் நிர்வாகத்தில் மட்டுமே மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. தக்காளி கிலோ ரூ.250-க்கும், இஞ்சி ரூ.350-க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. எல்லாவற்றின் விலையாலும் மக்கள் கவலையில் உள்ளனர். ஆனால் மத்திய அரசாங்கம் மணிப்பூரை பற்றியோ, பணவீக்கம் பற்றியோ விவாதிக்கவில்லை. எனவே அரசின் கவனத்தை ஈர்க்கவே இந்த மாலையை அணிந்து வந்தேன்" என்றார்.