மராட்டியத்தில் ஆதித்ய தாக்கரே எம்.எல்.ஏ பதவிக்கு ஆபத்து?
|ஆதித்யா தாக்கரே கட்சியின் கொறாடா உத்தரவை எதிர்த்து வாக்களித்ததால் அவர் பதவியிழக்கும் சூழல் உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த 2½ ஆண்டுகளாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தது. இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் இந்த ஆட்சி கவிழ்ந்தது. கடந்த புதன் கிழமை உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த நாளே அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியானார். மராட்டியத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது அரசுக்கு பெரும்பான்மை இருப்பதை ஏக்நாத் ஷிண்டே காட்டினார்.
சிவசேனாவின் 55 எம்எல்ஏக்களில் 40-க்கும் மேற்பட்டோர் ஷிண்டே அணியில் உள்ளனர். அதேசமயம் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அணியில் 15 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். இதனையடுத்து சபாநாயகர் தேர்தல் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவசேனாவின் ஷிண்டே பிரிவைச் சேர்ந்த கொறடா பாரத் கோகவாலே கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார். கொறடா உத்தரவை மீறி ஆதித்ய தாக்கரே ஏக்நாத் ஷிண்டேவிற்கு எதிராக வாக்களித்ததாக கூறப்படுகிறது.
கொறடாவின் உத்தரவை மீறி சட்டப்பேரவைக்குள் வாக்களிக்கும் எம்எல்ஏக்களின் பதவியை பறிக்க வாய்ப்புண்டு. இதனை பயன்படுத்தி சிவசேனா கொறடா பாரத் கோகவாலே சபாநாயகர் ராகுல் நர்வேகரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் பயந்து போன உத்தவ் தாக்கரே ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர் இன்று ஷிண்டேவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எனினும் அவர்கள் எண்ணிக்கை விவரம் வெளியாகவில்லை.
சிவசேனா கொறடாவின் புகாரையடுத்து உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே உள்ளிட்ட அதிருப்தி சிவசேனா எம்எல்ஏகளுக்கு விளக்கம் கோரி சபாநாயகர் ராகுல் நர்வேகர் நோட்டீஸ் அனுப்புவார் எனத் தெரிகிறது. எனினும், அடுத்த திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தின் வழக்க்கு வருவதால், தங்களுக்கு சாதகமாக அமையும் என்று தாக்கரே தரப்பு நம்புகிறது.