< Back
தேசிய செய்திகள்
ஆடிக்கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
தேசிய செய்திகள்

ஆடிக்கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

தினத்தந்தி
|
10 Aug 2023 12:15 AM IST

ஆடிக்கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் பக்தர்கள் காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

பெங்களூரு:

ஆடிக்கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் பக்தர்கள் காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

ஆடிக்கிருத்திகை

ஆடிக்கிருத்திகை என்பது ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் அனுசரிக்கப்படும் இந்துக்களின் முக்கிய பண்டிகையாகும். இந்த பண்டிகை தினத்தில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரமும், தை மாதத்தில் வரும் கார்த்திகையும் இந்துக்களால் முக்கியமான நாளாக கருதப்படுகின்றது. அன்றைய தினங்களில் முருகப்பெருமான் கோவில்களில் வெகு விமரிசையான விசேஷங்கள் நடக்கின்றன.

முருகனுக்காக பலரும் விரதம் இருக்கின்றனர். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதம் இருப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. இது மிகவும் உயர்வாகவும் கருதப்படுகிறது. கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும்-பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள பிள்ளைகளை பெறுவார்கள் என்றும் நம்பப்படுகிறது.

காவடி எடுத்து வந்த பக்தர்கள்

இதன்காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்கிருத்திகை அன்று முருகன் கோவில்கள் விசேஷமாக காணப்படுகின்றன. அதுபோல் இந்த ஆண்டும் முருகன் கோவில்களில் அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் செய்யப்பட்டன. மேலும் முருகனை வேண்டி விரதம் இருந்த பக்தர்கள் காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பக்தர்கள் அரோகரா, அரோகரா என கோஷமிட்டபடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். குறிப்பாக ஏராளமான பள்ளிக்கூட சிறுவர்-சிறுமிகள் காவடி எடுத்து வந்ததை பார்க்க முடிந்தது. பக்தர்கள் தேர்காவடி உள்பட பல்வேறு வகைகளில் காவடி எடுத்து வந்தனர். காவடி எடுத்து வந்த பக்தர்கள் கோவில்களில் அமைக்கப்பட்டு இருந்த சிறப்பு வழியாக நேரடியாக சன்னதிக்கு சென்று நேர்த்திக்கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

பெங்களூருவில் அனுமந்தநகர் சுப்பிரமணியசாமி கோவில், குமார பார்க் பகுதியில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில், ராஜாஜிநகரில் உள்ள பாலதண்டாயுதபாணி முருகன் கோவில், அல்சூருரில் உள்ள முருகன் கோவில், மரியப்பனபாளையாவில் உள்ள முருகன் கோவில், பாஷியம்நகரில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் உள்பட அனைத்து முருகன் கோவில்கள், சன்னதிகளில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு விசேஷ பூஜைகளும் நடந்தன. மேலும் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி அருகே பத்ரகிரியில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடந்தன. திரளான பக்தர்கள் காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தியது ஒவ்வொரு முருகன் கோவில்களிலும் காண முடிந்தது.

அன்னதானம்

மேலும் பல முக்கிய கோவில்கள் விழாக்கோலம் பூண்டது போல் காட்சி அளித்தது. கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். ஆடிக்கிருத்திகை பண்டிகையையொட்டி பெங்களூருவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க கோவில்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்