கிராம ஒன் சேவை மையம் மூலம் ஆதார், ரேஷன் கார்டு பெற்று கொள்ளலாம்
|கிராம ஒன் சேவை மையம் மூலம் ஆதார், ரேஷன் கார்டு பெற்றுக்கொள்ளலாம் என்று பொதுமக்களுக்கு, குடகு மாவட்ட கலெக்டர் சதீஸ் தெரிவித்துள்ளார்.
குடகு;
கிராம தங்கல் நிகழ்ச்சி
குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா செட்டள்ளி கிராமத்தில் கலெக்டரின் கிராம தங்கல் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் குடகு மாவட்ட கலெக்டர் சதீஸ் கலந்து கொண்டு செட்டள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து கலெக்டர் சதீஸ், பொதுமக்களிடம் பேசியதாவது:-
கிராம தங்கல் நிகழ்ச்சி பொதுமக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இதன் மூலம் தங்களது பிரச்சினைகளை நேரடியாக அரசுக்கு தெரிவித்து தீர்வு காண முடியும். அரசு அதிகாரிகள் பொதுமக்களின் குறைகளை கேட்டு உடனே தீர்த்து வைக்கவேண்டும். குறிப்பாக குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும்.
கிராம ஒன் சேவை மையம்
கிராம ஒன் சேவை மையம் மூலம் ஆதார், ரேஷன் கார்டுகள் பெற்றுக்கொள்ளலாம். பருவமழை காலங்களில் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளை எடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.