< Back
தேசிய செய்திகள்
ஆன்லைன் பயன்பாடு.. குழந்தைகளுக்கு ஆதார் அடிப்படையில் ஒப்புதல்: புதிய பாதுகாப்பு விதிகள்
தேசிய செய்திகள்

ஆன்லைன் பயன்பாடு.. குழந்தைகளுக்கு ஆதார் அடிப்படையில் ஒப்புதல்: புதிய பாதுகாப்பு விதிகள்

தினத்தந்தி
|
18 Dec 2023 3:23 PM IST

ஆதார் அடிப்படையில் வயதை சரிபார்க்கும்போது, இணையதளத்தை பயன்படுத்தும் நபர் உண்மையில் குழந்தைதானா? என்பதை கண்டறியமுடியும்.

புதுடெல்லி:

தனிநபர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்தல் மற்றும் அவர்களுக்கான உரிமையை வழங்குவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், முன்மொழியப்பட்ட டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்ட விதிகள் குறித்த ஆலோசனைகளை நாளை தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சட்டத்தை செயல்படுத்த குறைந்தபட்சம் 25 விதிகள் உருவாக்கப்பட வேண்டும். பொருத்தமான விதிகளை இயற்றுவதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் ஆன்லைன் சேவைகளை பயன்படுத்துவதற்கு முன்பு அந்த குழந்தையின் வயதை சரிபார்க்க பெற்றோரின் ஒப்புதல் பெறவேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்கள் இணையதளத்தை பயன்படுத்த அணுகும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அந்த பயனரின் பெற்றோரின் ஒப்புதல் தொடர்பான தகவலை சேகரிக்க வேண்டும் என்று சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இணையதளங்கள் பயனர்களின் வயதைக் கணக்கிடுவதற்கான வழிகளை சட்டம் பரிந்துரைக்காததால், தொழில் நிறுவனங்கள் அதுபற்றிய ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளன.

இதற்காக இரண்டு விதிகள் முன்மொழியப்பட்டுள்ளன. ஒன்று பெற்றோரின் டிஜிலாக்கர் செயலியைப் பயன்படுத்துவது, மற்றொன்று தொழில்துறையினர் மின்னணு டோக்கன் முறையை உருவாக்குவது.

டிஜிலாக்கர் வசதியானது அவர்களின் ஆதார் விவரங்களை அடிப்படையாகக் கொண்டது. மின்னணு டோக்கன் முறை, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே அனுமதிக்கப்படும்.

எனவே, ஆதார் அடிப்படையிலான விதியே சிறந்த தேர்வாக இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கு, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆதார் விவரங்களை டிஜிலாக்கர் செயலியில் பதிவு செய்யவேண்டும். இதன்மூலம், ஒரு இணையதளத்தை பயன்படுத்தும் நபர் உண்மையில் குழந்தைதானா? என்பதை கண்டறிவதுடன், பெற்றோரின் ஒப்புதலையும் பெற முடியும்.

மேலும் செய்திகள்