சந்தன மரம் கடத்திய வாலிபர் சுட்டுக்கொலை தப்பி ஓடிய மற்றொருவருக்கு வலைவீச்சு
|பெங்களூரு அருகே சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற வாலிபரை வனத்துறையினர் என்கவுன்ட்டரில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு:-
சந்தன மரங்கள் கடத்தல்
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா பன்னரகட்டா வனப்பகுதியில் இருந்து சந்தன மரங்களை வெட்டி சிலர் கடத்திச் செல்வதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, வனத்துறையினர் கடத்தல் கும்பலை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில் பன்னரகட்டா உயிரியல் பூங்கா அருகே உள்ள கல்கெரே வனப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வினய் உள்பட 2 வனக்காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நள்ளிரவு 1.15 மணியளவில் கல்கெரே வனப்பகுதியில் 2 பேர் சந்தன மரத்தை வெட்டி அதனை கடத்தி செல்ல முயற்சித்து கொண்டிருந்தனர். அந்த 2 கடத்தல்காரர்களையும் வனக்காவலர்கள் பிடிக்க முயன்றனர்.
துப்பாக்கியால் சுட்டுக்கொலை
அப்போது அவர்கள் 2 பேரும் தங்களிடம் இருந்த அரிவாளால் வனக்காவலர்களை தாக்கவும் முயன்றனர். இதையடுத்து, வினய் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒருமுறை சுட்டுவிட்டு 2 பேரையும் சரண் அடைந்து விடும்படி எச்சரித்தார். ஆனால் அவர்கள் சரண் அடைய மறுத்ததுடன் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர்.
இதையடுத்து, வனக்காவலர் வினய் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் கடத்தல்காரர்களை நோக்கி சுட்டார். இதில், ஒரு குண்டு கடத்தல்காரரின் உடலில் பாய்ந்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பலியானார். சுதாரித்து கொண்ட மற்றொரு நபர் தப்பி ஓடிவிட்டார். நள்ளிரவு என்பதால், அவரை பிடிக்க முயன்றும் வனக்காவலர்களால் முடியாமல் போனது.
கோலாரை சேர்ந்தவர்
இதுபற்றி உடனடியாக பன்னரகட்டா போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து என்கவுன்ட்டரில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நபரின் உடலை கைப்பற்றி விசாரித்தார்கள்.
அப்போது அவர் கோலார் மாவட்டம் மாலூரை சேர்ந்த திம்மராயப்பா(வயது 28) என்று தெரிந்தது. தப்பி ஓடியவர், இவரது கூட்டாளி என்பதும் தெரிந்தது. இவர்கள் 2 பேரும் சந்தன மரங்களை வெட்டி கடத்தி விற்று வந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. தகவல் அறிந்ததும் பெங்களூரு புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜுன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரித்தார்.
மற்றொரு நபருக்கு வலைவீச்சு
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜுன் கூறுகையில், 'பன்னரகட்டா அருகே கல்கெரே வனப்பகுதியில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்னொருவர் தப்பி ஓடிவிட்டார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது', என்றார்.
இதுகுறித்து பன்னரகட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மற்றொரு நபரை வலைவீசி தேடிவருகிறார்கள்.