வனவிலங்குகளை வேட்டையாடிய வாலிபர் சிக்கினார்
|ஜகலூர் தாலுகாவில், வனவிலங்குகளை வேட்டையாடிய வாலிபர் சிக்கினார்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்டம் ஜகலூர் தாலுகா மாரனஹள்ளி கிராமத்தில் அருகே வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிவதாக வனத்துறை அதிகாரிகளுக்கும், ஜகலூர் போலீசாருக்கும் தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின்பேரில் வனப்பகுதிக்கு போலீசார் மற்றும் வனத்துறையினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து போலீசாா் விசாரித்து உள்ளனர்.
அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் பசவேஸ்வரா படாவனே பகுதியை சேர்ந்த அனுமந்தா (வயது 30) என்பதும், அவா் வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகளை வேட்டையாடி வந்ததும் தெரியவந்தது.
மேலும் அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ஆயுதங்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.