இரவில் தனியாக நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
|மோட்டார் சைக்கிளில் வந்த அந்த நபர், திடீரென இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்களா 5-வது பிளாக் சாலையில் இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றார். இரவு நேரம் என்பதால் அந்த சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. அப்போது இளம்பெண் நடந்து சென்ற சாலையில் எதிரே மர்மநபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் இளம்பெண் அருகே வந்தபோது, திடீரென அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் கத்தி கூச்சலிட்டார். உடனே அந்த நபர் தனது மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
அவரை அந்த பெண் விரட்டி சென்றார். எனினும் மர்மநபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக கோரமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் மர்மநபர் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அண்மை காலங்களில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.