முகூர்த்த நேரத்தில் திருமணத்தை நிறுத்திய இளம்பெண்
|முகூர்த்த நேரத்தில் வாலிபர் ஒருவரை காதலிப்பதாக கூறி இளம்பெண் ஒருவர் திருமணத்தை நிறுத்திய சம்பவம் துமகூருவில் நடந்துள்ளது.
துமகூரு:-
இளம்பெண்
துமகூரு (மாவட்டம்) டவுன் பகுதியில் 22 வயது பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்த இளம்பெண்ணுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். பின்னர் துமகூரு மாவட்டத்திலேயே வசித்து வரும் ஒரு வாலிபரை பார்த்து திருமணம் பேசி முடித்தனர்.
அவர்களது திருமணம் நேற்று காலையில் துமகூரு டவுனில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பும் நடந்தது. அதில்
மணமகன் மற்றும் மணமகள் வீட்டார், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அப்போது அந்த இளம்பெண், மணமகனுடன் சந்தோஷமாக இருந்தார். புகைப்படங்கள் எடுக்கவும் போஸ் கொடுத்தார்.
பரபரப்பு
நேற்று காலையில் முகூர்த்த நேரம் நெருங்கியது. இளம்பெண்ணுக்கு, மணமகன் தாலி கட்ட தயாரானார். அப்போது திடீரென மணமேடையில் இருந்து இளம்பெண் எழுந்து கீழே இறங்கினார். மேலும் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், தான் ஒரு வாலிபரை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் அங்கு கூடியிருந்த அனைவரின் முன்பும் சத்தமாக கூறினார்.
இதனால் அங்கிருந்தவர்கள் செய்வதறியாது திகைத்துப் போயினர். மணமகளை அவரது பெற்றோர் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர் தொடர்ந்து தனது காதலனை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினார்.
பேச்சுவார்த்தை
இதனால் திருமணம் நின்று போனது. இதனால் கொதித்தெழுந்த மணமகன் வீட்டார், இளம்பெண்ணின் பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் திருமண மண்டபம் களை இழந்தது. பின்னர் இதுபற்றி கொலால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் இளம்பெண்ணை போலீசார் மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். முகூர்த்த நேரத்தில் திருமணத்தை மணப்பெண் நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.