மது வாங்கி கொடுத்து காருக்குள் இளம்பெண் பாலியல் பலாத்காரம்
|ஜோசப் ஜேம்ஸ் பெண்ணை ஓட்டலுக்கு அழைத்து சென்று மதுபானம் வாங்கி கொடுத்தார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் தானேயை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் வேலை தேடி வந்தார். எனவே தனது தோழியிடம் வேலை வாங்கி தருமாறு உதவி கோரினார். இதையடுத்து தோழி ஜோசப் ஜேம்ஸ் (வயது50) என்பவரின் செல்போன் நம்பரை பெண்ணுக்கு அனுப்பி, இவரை தொடர்பு கொண்டால் வேலை வாங்கி தருவார் என உறுதி அளித்தார்.
இதனை நம்பிய பெண் அவரை தொடர்பு கொண்டார். அப்போது அவர் பெண்ணை கார் ரோடு பகுதிக்கு வருமாறு அழைத்தார். அதன்படி கடந்த 16-ந்தேதி அப்பெண் தானேயில் இருந்து கார் ரோடு ரெயில் நிலையத்திற்கு வந்தார். அங்கு ஜோசப் ஜேம்ஸ்சை சந்தித்து விவரத்தை தெரிவித்தார். இதன்பின்னர் ஜோசப் ஜேம்ஸ் அங்குள்ள ஓட்டலுக்கு பெண்ணை அழைத்து சென்று மதுபானம் வாங்கி கொடுத்தார்.
இந்த நிலையில் இரவு வெகுநேரமானதால் அப்பெண் தானே செல்ல ரெயில் நிலையத்தில் விடுமாறு தெரிவித்தார். இதன்படி ஜோசப் ஜேம்ஸ் தனது காரில் கார் ரோடு ரெயில் நிலையத்திற்கு பெண்ணை அழைத்து சென்றார். அப்போது காரை ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் நிறுத்திய ஜோசப் ஜேம்ஸ் அங்குவைத்து பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் இது பற்றி யாரிடமும் தெரிவிக்க கூடாது என மிரட்டினார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் சம்பவம் குறித்து அருகில் உள்ள போலீசில் புகார் அளித்தார். புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஜோசப் ஜேம்ஸ்சை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.