< Back
தேசிய செய்திகள்
கடற்கரையில் காதலிக்கு நேர்ந்த விபரீதம்: விட்டால் போதும் என தப்பி ஓடிய காதலன்...!
தேசிய செய்திகள்

கடற்கரையில் காதலிக்கு நேர்ந்த விபரீதம்: விட்டால் போதும் என தப்பி ஓடிய காதலன்...!

தினத்தந்தி
|
11 Oct 2023 5:21 PM IST

பாறைகளுக்கு இடையில் தவறி விழுந்த காதலியை காப்பாற்றாமல் காதலன் தப்பி ஓட்டம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதி,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அப்பிக்கொண்டா பகுதியைச் சேர்ந்தவர் பனிந்திரா. இவர் மச்சிலி பட்டணம் பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 29-ந்தேதி பனிந்திரா தனது காதலியை ரகசிய திருமணம் செய்து கொள்ளலாம் என அழைத்தார். அதன்படி இளம்பெண் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் யாருக்கும் தெரியாமல் வெளியேறினார். மகள் காணாமல் போனதால் பதறிப்போன பெற்றோர்கள் மச்சிலி பட்டணம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வந்தனர்.

பனிந்திரா தனது காதலியை அழைத்துக்கொண்டு கோபால பட்டினத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்தார்.நேற்று முன்தினம் பனிந்திரா மற்றும் இளம்பெண் இருவரும் அப்பிக்கொண்டா கடற்கரைக்கு சென்றனர். அந்த கடற்கரையில் உயரமான இடத்தில் அமர்ந்திருந்தனர். அந்த இடத்திற்கு கீழே பெரிய அளவிலான பாறைகள் உள்ளன. அதில் ராட்சத அலைகள் வந்து சீறிப்பாய்ந்து கொண்டிருந்தன.அதனை இருவரும் ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது இளம்பெண் திடீரென தவறி கீழே விழுந்தார். உயரமான இடத்தில் இருந்து விழுந்த அவர் பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டார்.

அலைகள் இருந்ததால் அவர் எங்கே இருக்கிறார் என்பது பனிந்திராவுக்கு தெரியவில்லை. மேலும் அப்போது இருட்ட தொடங்கியது. இதனால் பயந்து போன பனிந்திரா தனது காதலியை காப்பாற்ற எந்த விதமான முயற்சியும் எடுக்காமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பாறை இடுக்கில் சிக்கிய இளம்பெண் கத்தி கூச்சலிட்டு கொண்டிருந்தார். இரவு நேரமானதால் கடற்கரையில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. பாறை இடுக்குகளில் சிக்கி விடிய விடிய தவித்தார்.

அதிகாலை நேரத்தில் கடலில் மீன் பிடிக்க மீனவர்கள் வந்தனர். அவர்கள் இளம்பெண்ணின் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தனர்.அப்போது பாறை இடுக்கில் சிக்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணை மீட்டனர். அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதுகுறித்து மீனவர்கள் அந்த பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளம்பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பெற்றோரை போலீசார் எச்சரித்தனர். கடலை பார்த்துக் கொண்டிருந்த போதுதான் தவறி விழுந்து விட்டேன். இந்த சம்பவத்திற்கும் காதலன் பனிந்திராவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இளம்பெண் உறுதியாக கூறினார். காதலியை தவிக்க விட்டு காப்பாற்றாமல் தப்பி ஓடிய காதலன் பனிந்திராவை செல்போனில் தொடர்பு கொள்ள போலீசார் முயன்றனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. போலீசார் அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்