< Back
தேசிய செய்திகள்
புதுப்பெண்ணான தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை; கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
தேசிய செய்திகள்

புதுப்பெண்ணான தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை; கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு

தினத்தந்தி
|
24 Oct 2022 12:15 AM IST

பெங்களூருவில், புதுப்பெண்ணான தனியார் பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்து உள்ளது. இதுதொடர்பாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

பெங்களூரு:

தனியார் பள்ளி ஆசிரியை

மைசூரு அக்ரஹாரா பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கா. இவரது மகள் நிஹாரிகா (வயது 25). இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நிஹாரிகாவுக்கும், பெங்களூரு புட்டேனஹள்ளியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் திருமணம் நடந்து இருந்தது. திருமணத்திற்கு பின்னர் புட்டேனஹள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நிஹாரிகா ஆசிரியையாக பணியாற்றி வந்து உள்ளார்.

ஆனால் பள்ளிக்கு வேலைக்கு செல்வது தொடர்பாக நிஹாரிகாவுக்கும், கார்த்திக்கிற்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் நிஹாரிகாவுக்கு, கார்த்திக்கும் அவரது குடும்பத்தினரும் தொல்லை கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் நிஹாரிகா பெங்களூருவில் வசித்து வரும் தனது சகோதரியின் வீட்டிற்கு சென்று விட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கு சென்ற கார்த்திக், நிஹாரிகாவை சமாதானப்படுத்தி அழைத்து வந்து உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் கார்த்திக், நிஹாரிகா இடையே மீண்டும் பிரச்சினை உண்டானதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த நிஹாரிகா தனது கணவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்ததும் புட்டேனஹள்ளி போலீசார் அங்கு சென்று நிஹாரிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நிஹாரிகாவை கார்த்திக்கும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து கொலை செய்து உடலை தூக்கில் தொங்கவிட்டதாக கூறி நிஹாரிகாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது புட்டேனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்