< Back
தேசிய செய்திகள்
கல்லூரி மாணவியுடன் குளிர்பானம் குடித்த வாலிபர் மீது தாக்குதல் போலீஸ் விசாரணை
தேசிய செய்திகள்

கல்லூரி மாணவியுடன் குளிர்பானம் குடித்த வாலிபர் மீது தாக்குதல் போலீஸ் விசாரணை

தினத்தந்தி
|
4 May 2023 1:45 AM IST

புத்தூரில் கல்லூரி மாணவியுடன் குளிர்பானம் குடித்த சக மாணவன் மீது தாக்குல் நடத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மங்களூரு,

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் டவுன் மரியல் காட்டுமனை பகுதியைச் சேர்ந்தவர் முகமது பாரீஷ்(வயது 18). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பி.யூ. கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். முகமது, அவருடன் படிக்கும் ஒரு மாணவியும் நண்பர்களாக பழகி வருகிறார்கள். நேற்று முன்தினம் அந்த மாணவி, முகமது பாரீசை நேரில் சந்திக்க அழைப்பு விடுத்தார்.

அதன்பேரில் இருவரும் புத்தூரில் உள்ள ஒரு குளிர்பான ரெஸ்டாரண்டில் சந்தித்தனர். பின்னர் இருவரும் குளிர்பானம் குடித்தபடி பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த 15 பேர் கும்பல் முகமது பாரீசை தனியாக அழைத்து விசாரித்தனர்.

பின்னர் திடீரென அவர்கள் முகமது பாரீசை சரமாரியாக தாக்கினர். இதை சற்றும் எதிர்பாராத முகமது பாரீஸ் அலறி துடித்தார். அவரது கூச்சல் சத்தத்தைக் கேட்ட அந்த மாணவி அங்கு ஓடி வந்தார். அப்போது அந்த கும்பல், மாணவியை மிரட்டி அங்கிருந்து விரட்டியடித்தனர். பின்னர் தொடர்ந்து மாணவர் முகமது பாரீசை கண்மூடித்தனமாக தாக்கினர். இரும்பு கம்பிகள், தடிகள் உள்பட பயங்கர ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக மாணவர் முகமது பாரீசை மீட்டு சிகிச்சைக்காக புத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மாணவர் முகமது பாரீசை தாக்கியது பஜ்ரங்தள அமைப்பினர் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்