< Back
தேசிய செய்திகள்
காதலனை கரம் பிடித்த கையோடு மணக்கோலத்தில் தேர்வு எழுதிய இளம்பெண்
தேசிய செய்திகள்

காதலனை கரம் பிடித்த கையோடு மணக்கோலத்தில் தேர்வு எழுதிய இளம்பெண்

தினத்தந்தி
|
11 Sept 2023 12:15 AM IST

முகநூலில் அறிமுகமான காதலனை கரம்பிடித்த கையோடு மணக்கோலத்தில் இளம்பெண் தேர்வு எழுதிய சம்பவம் சிவமொக்காவில் நடந்தது.

சிவமொக்கா:

கர்நாடக மாநிலம் சிவமொக்கா பர்மப்பா நகரை சேர்ந்தவர் சத்தியவதி (வயது 26). இவர் சிவமொக்காவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியவதிக்கு முகநூலில் (பேஸ்புக்) மூலம் தமிழ்நாடு சென்னையை சேர்ந்த பிரான்சிஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பிரான்சிஸ் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். முகநூலில் ஏற்பட்ட பழக்கம் இருவர் இடையே காதலாக மலர்ந்தது. இதைத்தொடர்ந்து செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு இருவரும் பேசி தங்களது காதலை வளர்ந்து வந்தனர்.

இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து சத்தியவதியும், பிரான்சிசும் தங்களது பெற்றோர்களிடம் காதல் பற்றி கூறியதுடன், திருமணம் செய்ய சம்மதம் கேட்டனர். அவர்களும் இருவரின் திருமணத்திற்கும் பச்சைக்கொடி காட்டினர். இதைத்தொடர்ந்து சிவமொக்காவில் ெசப்டம்பர் 10-ந்தேதி (அதாவது நேற்று) திருமணம் நடத்த ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வந்தது. இதற்கிடையே இறுதியாண்டு பி.ஏ. பொருளாதாரம் படித்து வந்த சத்தியவதிக்கு பொருளாதார தேர்வும் திருமண நாள் அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர் தாலிக்கட்டு முடிந்தவுடன், தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று காதலன் பிரான்சிசிடம் கேட்டுள்ளார். அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து திட்டமிட்டப்படி சத்தியவதி, பிரான்சிசின் திருமணம் சிவமொக்காவில் உள்ள மணமகள் வீட்டில் நேற்று காலை நடந்தது. மணமக்களை உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்தினர். காதலனை கரம்பிடித்த மகிழ்ச்சியில் சத்தியவதி மணப்பெண் கோலத்திலேயே நேராக தேர்வு மையத்திற்கு வந்தார். அவரை அவரது காதல் கணவரே காரில் தேர்வு மையத்திற்கு அழைத்து வந்தார். பின்னர் தேர்வு அறைக்கு நுழைய முயன்ற சத்தியவதியை பிரான்சிஸ் கட்டியணைத்து தேர்வை வெற்றிகரமாக எழுதும்படி வாழ்த்தி அனுப்பி வைத்தார். சத்தியவதி தேர்வு எழுதி முடித்த பிறகு பிரான்சிஸ் வீட்டுக்கு அழைத்து சென்றார். அதன்பிறகே மற்ற திருமண சடங்குகள் நடந்தது.

காதலனை கரம்பிடித்து இல்லற வாழ்வில் இணைந்த கையோடு மணக்கோலத்திலேயே இளம்பெண் தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுதிய சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சுவாரசியமான விவாதமாக மாறியிருந்ததை காண முடிந்தது.

மேலும் செய்திகள்