காதலிக்க மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து: போலீஸ்காரரையும் தாக்க முயன்ற வாலிபர் கைது
|பெங்களூரு அருகே காதலிக்க மறுத்ததால் கத்தியால் குத்தி கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை கொல்ல முயன்ற சம்பவம் நடந்துள்ளது. பிடிக்க முயன்ற போலீஸ்காரரையும் தாக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு:
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. திருமணமான இவர், கணவருடன் வாழ பிடிக்காமல் பிரிந்து வாழ்ந்து வந்தார். பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா அத்திப்பள்ளியில் உள்ள ஓட்டலில் ஜெயலட்சுமி வேலை பார்த்து வருகிறார். ஜெயலட்சுமியை பாகேபள்ளியை சேர்ந்த சீனிவாஸ் (வயது 28) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதால் தன்னை காதலிக்கும்படி ஜெயலட்சுமிக்கு சீனிவாஸ் தொல்லை கொடுத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பாகேபள்ளியில் இருந்து அத்திப்பள்ளிக்கு சீனிவாஸ் வந்தார். பின்னர் ஜெயலட்சுமியை சந்தித்து தன்னை காதலிக்கும்படியும் இல்லையெனில் கையை அறுத்துக் கொண்டு தற்கொலை கொள்வேன் என்றும் சீனிவாஸ் மிரட்டி உள்ளார்.
ஆனாலும் சீனிவாசின் காதலை ஏற்க ஜெயலட்சுமி மறுத்துவிட்டார். இதனால் சீனிவாஸ் கண்ணாடியால் தனது கையை அறுத்துக் கொண்டார். உடனே பாகேபள்ளிக்கு செல்லும் பஸ்சில் ஏறுவதற்காக ஜெயலட்சுமி தனது தோழியுடன் நடந்து சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து சென்ற சீனிவாஸ் திடீரென்று ஜெயலட்சுமியை தடுத்து நிறுத்தி கத்தியால் குத்தினார்.
இதில், அவருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த அத்திப்பள்ளி போலீசார் விரைந்து வந்து சீனிவாசை பிடிக்க முயன்றனர். அப்போது போலீஸ்காரர் பீரப்பா, மற்றொரு நபரை சீனிவாஸ் தாக்க முயன்றார். மேலும் தன்னை தானே கத்தியால் குத்திக் கொல்லவும் முயன்றார். அவரை போலீஸ்காரர் மடக்கி பிடித்தார்.
இதையடுத்து, ஜெயலட்சுமி, சீனிவாஸ் ஆகியோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெயலட்சுமியின் உயிருக்கு ஆபத்தில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சீனிவாசுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தார்கள்.
இதுகுறித்து அத்திப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.