திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனம் ஆடிய பெண் திடீரென மயங்கி விழுந்து மரணம்
|மத்திய பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனம் ஆடிய பெண் திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
சியோனி,
மத்திய பிரதேசத்தில் சியோனி நகரில் பகாரி கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. இதனை முன்னிட்டு, 4 பெண்கள் மேடையில் ஏறி உற்சாக நடனம் ஆடி கொண்டு இருந்தனர்.
இதில், மணமகளின் தாத்தாவின் சகோதரியான யசோதா சாகு என்பவரும் அழைக்கப்பட்டு உள்ளார். அவரை மேடையில் நடனம் ஆடும்படி கேட்டு கொண்டுள்ளனர். இதனால், சகோதரிகளான 3 பேருடன் சேர்ந்து சாகு ஒன்றாக மேடையில் நடனம் ஆடியுள்ளார்.
ஒரு கட்டத்தில் 2 பெண்கள் மேடையில் ஓர் ஓரத்தில் அமருவதற்காக சென்றனர். அவரை பின்தொடர்ந்து மற்றொரு பெண் சென்றுள்ளார். ஆனால், மற்றொரு புறத்தில் நடனம் ஆடியபடி இருந்த சாகு சற்று சோர்வாக காணப்பட்டார்.
தொடர்ந்து ஆட முடியாத அவர் திடீரென மயங்கி, மேடையிலேயே விழுந்து உள்ளார். இதன்பின் உடனிருந்தவர்கள் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், அவர் மரணம் அடைந்து விட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அதனால் உயிரிழந்து உள்ளார் என கூறப்படுகிறது.