ஓட்டலில் உணவு வாங்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - வாலிபர்களுக்கு வலைவீச்சு
|பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து உள்ளன.
பெங்களூரு,
பெங்களூருவில் வணிக வளாகம், மெட்ரோ ரெயில்கள் உள்ளிட்ட கூட்டம் அதிகம் நிறைந்த பகுதிகளில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து உள்ளன. இதுதொடர்பான வீடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பாதிக்கப்படும் பெண்கள் கொடுக்கும் புகாரின்பேரில் சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெங்களூருவில் ஓட்டலில் வைத்து பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரு விஜயநகர் பகுதியில் ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் உணவு வாங்குவதற்கு வந்த பெண் ஒருவர் தனது தோழியுடன் பேசியபடி நின்று கொண்டிருந்தார். அப்போது ஓட்டலுக்குள் வாலிபர் ஒருவர் வந்தார். அவர் அந்த பெண்ணின் அருகே சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். மேலும் வாலிபருடன் வாக்குவாதம் செய்தார்.
பெண்ணின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர், ஓட்டலுக்கு வெளியே நின்ற தனது நண்பர்கள் 2 பேருடன் அங்கிருந்து ஓடிவிட்டார். வாலிபர், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது ஓட்டலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இதையடுத்து அந்த பெண் தரப்பில் விஜயநகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து ஓட்டலில் உள்ள கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர், ஓட்டலுக்கு வெளியே தனது 2 நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார்.
அவர் அந்த பெண்ணை பார்த்தபடி ஏதோ பேசி உள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் ஓட்டலுக்குள் வந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இவை அனைத்தும் கேமராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து வீடியோவை ஆதாரமாக கொண்டு போலீசார் 3 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.