< Back
தேசிய செய்திகள்
சூடானில் இந்தியர்களை மீட்கும் பணியில்... இந்திய விமான படையின் பெண் விமானி
தேசிய செய்திகள்

சூடானில் இந்தியர்களை மீட்கும் பணியில்... இந்திய விமான படையின் பெண் விமானி

தினத்தந்தி
|
27 April 2023 8:28 PM IST

சூடானில் இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய விமான படையை சேர்ந்த பெண் விமானி ஒருவர் ஈடுபட்டு உள்ளார்.

ஜெட்டா,

சூடான் நாட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான சண்டை தீவிரமடைந்த நிலையில், வெளிநாட்டினரை மீட்க ஏதுவாக, போர்நிறுத்த ஒப்பந்தம் அமலானது.

இதனை தொடர்ந்து, பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டு குடிமக்களை கப்பல்கள், விமானங்கள் கொண்டு மீட்டு வருகின்றன. இந்திய விமான படையின் சி-130 ஜே ரக விமானம், சி-17 ரக போக்குவரத்து விமானம், 2 கடற்படை கப்பல்களும் மீட்பு பணிக்காக சென்று உள்ளன.

இதில், ஐ.என்.எஸ். சுமேதா கடற்படை கப்பலானது சூடானில் இருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு 528 இந்தியர்களை நேற்று அழைத்து வந்தது. அதன்பின் அவர்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டனர். மொத்தத்தில் இதுவரை 1,100 இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளனர் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இதில், ஜெட்டா வந்தடைந்த இந்தியர்களை சொந்த நாட்டுக்கு அழைத்து வர இந்திய விமான படை விமானங்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளன. இதில், சி-17 ரக போக்குவரத்து விமானம் ஒன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரே நேரத்தில் 70 டன் எடைகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த விமானத்தின் பெண் விமானியாக இந்திய விமான படையின் விமான லெப்டினன்ட் ஹர் ராஜ் கவுர் போபராய் இருந்து வருகிறார்.

இந்த ரக விமானத்தின் ஓட்டுநராக உள்ள முதல் மற்றும் ஒரே பெண் விமானி என்ற பெருமையையும் அவர் பெற்று உள்ளார். ஜெட்டா நகரில் இருந்து புறப்படும் முன் அவர், விமானத்தில் ஏறுவதற்கு பெண்களுக்கு உதவியாக அவர்களை, கைப்பிடித்து அவரே அழைத்து வந்தும் உள்ளார்.

மேலும் செய்திகள்