< Back
தேசிய செய்திகள்
விதான சவுதாவுக்கு கத்தியுடன் வந்த பெண் ஊழியரால் பரபரப்பு
தேசிய செய்திகள்

விதான சவுதாவுக்கு கத்தியுடன் வந்த பெண் ஊழியரால் பரபரப்பு

தினத்தந்தி
|
11 July 2023 3:26 AM IST

விதான சவுதாவுக்கு பெண் ஊழியர் கத்தியுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு:-

விதான சவுதா

கர்நாடக சட்டசபை கடந்த 3-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 7-ந் தேதி 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் கூட்டத்தின்போது, சட்டசபைக்கு ஒருவர் வந்தார். அவர் தேவதுர்கா எம்.எல்.ஏ.வின் இருக்கையில் அமர்ந்தார். அந்த நபரை பிடித்து சென்று மார்ஷல்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர் சித்ரதுர்காவை சேர்ந்த வக்கீல் திப்பேருத்ரப்பா என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் அவர் எவ்வாறு சட்டசபைக்குள் நுழைந்தார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் விதானசவுதாவில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அந்த சம்பவம் மறைவதற்குள் விதான சவுதாவுக்குள் பெண் ஒருவர் கத்தியுடன் வந்தது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

கத்தியுடன் வந்த பெண்

2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு சட்டசபை கூட்டம் நேற்று கூடியது. இதில் எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த நிலையில் விதான சவுதாவுக்கு வந்தவர்களை போலீசார் தீவிர சோதனை செய்தனர். அப்போது கிழக்கு நுழைவு வாயில் வழியாக விதான சவுதாவுக்குள் வந்தவர்களையும் அவர்களின் உடைமைகளையும் மெட்டல் டிடெக்டர் மூலம் போலீசார் சோதனை செய்தனர். அப்போது பெண் ஒருவரின் பையை போலீசார் சோதனை செய்தபோது அதில் கத்தி ஒன்று இருந்தது. இதையடுத்து அந்த பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் விதான சவுதா ஊழியர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்த போலீசார் அவரை, உள்ளே ெசல்ல அனுமதித்தனர். அந்த பெண் எதற்காக கத்தியை எடுத்து வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்