தண்ணீருக்காக தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி காட்டு யானை படுகாயம்
|படுகாயம் அடைந்த யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பாலக்காடு,
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழா வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளன. தற்போது கோடை வெயில் வாட்டி வதைப்பதால், யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி இடம்பெயர்ந்து வருகின்றன.
இந்தநிலையில் மலம்புழா அருகே கொட்டேக்காடு வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூட்டம் தண்ணீர் தேடி பாலக்காடு-கோவை இடையேயான ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த ரெயில் ஒரு பெண் யானையின் மீது மோதியது. இதில் யானையின் பின்னங்கால்களில் படுகாயம் ஏற்பட்டது. அந்த யானை மங்கலம் அணை பகுதியில் நடக்க முடியாமல் விழுந்து கிடந்தது.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று யானையை பார்வையிட்டனர். தொடர்ந்து வனத்துறை கால்நடை டாக்டர் தலைமையிலான டாக்டர்கள் படுகாயம் அடைந்த காட்டு யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். யானையின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் யானையால் நடக்க முடியாமல் படுத்து கிடக்கிறது என்றும், யானைக்கு புற்கள், இளநீர், மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது என்றும் வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.