ராமநகரில் அட்டகாசம் செய்து வந்த காட்டு யானை பிடிபட்டது
|ராமநகரில் அட்டகாசம் செய்து வந்த காட்டு யானை பிடிபட்டது.
ராமநகர்:
மக்கள் பீதி
ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணா தாலுகாவில் சிக்கமன்னுகுட்டே வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியையொட்டி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதனால் அவ்வப்போது யானை உள்ளிட்ட வனவிலங்குகள் கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தியும், விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியும் செல்கின்றன. இதனால் கிராம மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சன்னேனஹள்ளி கிராமத்திற்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது.
அந்த யானை விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது. இதுகுறித்து கிராமத்து விவசாயிகள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் காட்டு யானை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக தசரா யானை அபிமன்யு தலைமையிலான கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.
காட்டு யானை பிடிபட்டது
கடந்த 5 நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில், கிராமத்தின் அருகே இருந்த வனப்பகுதியில் காட்டு யானை நடமாடியது தெரிந்தது. இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன், காட்டு யானையை பிடித்தனர். இதையடுத்து வனத்துறையின் அதற்கு மயக்க ஊசி செலுத்தினர். பின்னர் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டுபோய் காட்டு யானையை விட்டனர். நீண்ட நாட்களாக அச்சுத்தி வந்த யானை பிடிபட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஒரே வாரத்தில் 2 காட்டு யானைகள் ராமநகர் மாவட்டத்தில் பிடிபட்டுள்ளது. இதேபோல் சன்னப்பட்டணா மற்றும் கனகபுரா தாலுகாக்களில் 2 பேரை மிதித்து கொன்ற காட்டு யானையை, கடந்த 8-ந் தேதி வனத்துறை அதிகாரிகள் கும்கிகள் உதவியுடன் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.