தொழிலாளியை ஓட ஓட விரட்டி கொன்ற காட்டு யானை
|வயநாட்டில் காட்டு யானையிடம் இருந்து தப்பிக்க சுவர் ஏறி குதித்தும், சுவரை உடைத்துச்சென்று ஓட ஓட விரட்டி தாக்கியதில் தொழிலாளி பலியானார்.
வயநாடு,
வயநாட்டில் காட்டு யானையிடம் இருந்து தப்பிக்க சுவர் ஏறி குதித்தும், சுவரை உடைத்துச்சென்று ஓட ஓட விரட்டி தாக்கியதில் தொழிலாளி பலியானார். இதனால் வனத்துறையினரை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி நகர் பகுதிக்குள் நேற்று அதிகாலை காட்டு யானை புகுந்தது. பின்னர் அங்கிருந்து படமலா சாலிகத்ரா பணச்சி என்ற இடத்திற்கு வந்து நடமாடியது. அப்போது அங்கு வீட்டின் முன்பு தொழிலாளியான அஜீஷ் (வயது 47) என்பவர் நின்று கொண்டிருந்தார். அவரை திடீரென காட்டு யானை விரட்டியது. உடனே அவர் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து வீட்டு வளாகத்திற்குள் சென்றார். இருப்பினும், ஆக்ரோஷமாக வந்த காட்டு யானை சுவரை உடைத்து தள்ளி விட்டு, ஓட ஓட விரட்டி அங்கே நின்றிருந்த அஜீஷை தாக்கியது. இதையடுத்து பொதுமக்கள் கூச்சலிட்டு காட்டு யானையை விரட்டினர். காட்டு யானை தாக்கியதில் அஜீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வயநாடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வனத்துறையினரை கண்டித்தும், உடலை பிணவறைக்கு எடுத்து செல்ல விடாமல் தடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. மக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனவே, காட்டு யானை ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும் என்றனர். அத்துடன் மானந்தவாடி அருகே காந்தி பார்க் சந்திப்பில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து வயநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு நாராயணனை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மானந்தவாடி நகராட்சிக்கு உட்பட்ட குருக்கன் மலை, பய்யம்பள்ளி, குருவா, காடன் கொல்லி ஆகிய 4 வார்டுகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஊருக்குள் புகுந்த யானை கர்நாடக வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு, அதன் நடமாட்டத்தை கண்காணிக்க ரேடியோ காலர் பொருத்தி வனப்பகுதியில் விடப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து வனத்துறையினர் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறை மந்திரி ஏ.கே.சசீந்திரன் கூறும்போது, ஊருக்குள் நுழைந்த காட்டு யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நேரத்தில் போராட்டத்தில் ஈடுபடுவது தேவையற்றது. இங்குள்ள நிலைமையை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். இக்கட்டான சூழலில் மாநில அரசுடன் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.