டெல்லி சட்டசபையில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
|டெல்லி சட்டசபையில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
புதுடெல்லி,
பாஜகவின் "ஆபரேஷன் தாமரை" முயற்சி, டெல்லியில் "ஆபரேஷன் சேறு"ஆக மாறியுள்ளது என்பதை பொதுமக்கள் முன் நிரூபிக்கும் வகையில், சட்டசபையில் நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வர விரும்புவதாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.
பாஜகவின் போராட்டம் ஊழலுக்கு எதிரானது அல்ல, அக்கட்சியின் "ஆபரேஷன் தாமரை" ஏமாற்றி ஆட்சியைப் பிடிப்பதற்கான வழியாகும் என்று அவர் கடும் விமர்சனங்களை கூறியிருந்தார். பாஜக 40 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை குறிவைத்து, அவர்கள் கட்சி மாற தலா ரூ.20 கோடி வழங்க முயற்சித்ததாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், டெல்லி சட்டசபையின் சிறப்புக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மிக்கு 62 எம்எல்ஏக்கள் உள்ளனர், அதே நேரத்தில் பாஜகவுக்கு 8 பேர் உள்ளனர்.
அவையில் கடும் அமளி நிலவியதால், சிறப்புக் கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லி சட்ட சபையில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.