< Back
தேசிய செய்திகள்
ஓட்டலில் பயங்கர தீ விபத்து பல லட்ச ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்
தேசிய செய்திகள்

ஓட்டலில் பயங்கர தீ விபத்து பல லட்ச ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்

தினத்தந்தி
|
15 July 2022 8:57 PM IST

மணிபால் அருகே, மின்கசிவால் ஓட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் மதுபான பாட்டில்கள், நாற்காலிகள் உள்பட பல லட்ச ரூபாய் பொருட்கள் எரிந்து நாசமானது.

மங்களூரு;

மதுபானம் விற்பனை

உடுப்பி மாவட்டம் மணிபால் தொழில்நுட்ப வளாகம் அருகில் தனியார் தங்கும்விடுதி உள்ளது. இந்த விடுதியுடன் ஓட்டலும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், ஓட்டலில் உணவு, மதுபானம் விற்பனை நடைபெற்று வந்தது.

நேற்று முன்தினம் வழக்கம் போல் விடுதி மற்றும் ஓட்டலை பூட்டிவிட்டு, ஊழியர்கள் சென்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் ஓட்டலில் இருந்து கரும்புகை வெளியானது.

மேலும், தீ மளமளவென எரிந்தது. உடனே இதுகுறித்து அக்கம்பக்கத்தினர், மணிபால் போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும், உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து நீண்ட நேரம் போராடத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். மேலும், தீ மற்ற இடங்களுக்கு பரவாமலும் தடுத்தனர்.

மின்கசிவு

பின்னர், அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது ஓட்டலில் இருந்த நாற்காலிகள், மதுபானங்கள் உள்பட பல பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டு இருக்கும் என தெரியவந்தது.

மேலும், இந்த தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

மேலும் செய்திகள்