< Back
தேசிய செய்திகள்
மளிகைக்கடையில் பயங்கர தீ விபத்து; ரூ.5 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
தேசிய செய்திகள்

மளிகைக்கடையில் பயங்கர தீ விபத்து; ரூ.5 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

தினத்தந்தி
|
1 Aug 2022 8:33 PM IST

உப்பள்ளியில் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் உள்ள ஒரு மளிகைக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.5 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.

உப்பள்ளி;

மளிகைக்கடையில் தீ விபத்து

தார்வார் மாவட்டம் உப்பள்ளி நவநகரில் ஏ.பி.எம்.சி. மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் வாட்டர் டேங்க் அருகே கோவிந்தப்பா என்பவருக்கு சொந்தமான மொத்த விற்பனை மளிகைக்கடை அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை, மளிகைக்கடையில் இருந்து புகை வந்தது. இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள், கோவிந்தப்பாவுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே அவர் கடைக்கு வந்து பார்த்தார். அப்போது கடையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்தவர்கள் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீ, கடை முழுவதும் பரவி மளமளவென கொழுந்துவிட்டு எரிந்ததால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.


ரூ.5 லட்சம் பொருட்கள்

இதுகுறித்து அமர்கோல் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் அதற்குள் கடைக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமானது.

அதாவது, கடைக்குள் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. இதுபற்றி தகவல் அறிந்ததும் உப்பள்ளி நவநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மின்கசிவு காரணமாக கடையில் தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக உப்பள்ளி நவநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்