வெளிநாட்டு பெண் சுற்றுலாவாசிகளுக்கு 'விலை' நிர்ணயித்த வாலிபர்; வீடியோ வைரலாகி சர்ச்சை
|சமூகத்தில் பிறரை மதிப்பது, விதிகளை பின்பற்றுவது ஆகியவை பற்றி அந்த வாலிபருக்கு உணர்த்த வேண்டும் என்று நெட்டிசன் ஒருவர் தெரிவித்து உள்ளார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் புகழ் பெற்ற அமீர் கோட்டை அமைந்துள்ளது. இதனருகே அமீர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இதில், செயல்பட்டு வரும் கடைகள் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றன.
இந்த பகுதிக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாவாசிகளும் வருகை தருவது வழக்கம். இந்நிலையில், அந்த பகுதியை சேர்ந்த குரு என்ற வாலிபர், தன்னை சுற்றுலா வழிகாட்டி என கூறியபடி, வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாவாசிகள் பலரை சில குறிப்பிட்ட கடைகளில் பொருட்களை வாங்கும்படி செய்திருக்கிறார்.
வெளிநாடுகளை சேர்ந்த பெண் சுற்றுலாவாசிகளை வீடியோவாகவும் எடுத்துள்ளார். அப்போது, அவர்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து, இவர் ரூ.150-க்கு கிடைப்பார். இவருக்கு விலை ரூ.200. இவரை ரூ.500 தந்து பெற்று கொள்ளலாம். இது ரூ.300-க்கு கிடைக்கும் என வீடியோவில் கூறியுள்ளார்.
ஆனால், அவர் இந்தியில் என்ன கூறுகிறார் என அறியாமல், அந்த வெளிநாட்டு பெண்களும் கேமிரா முன் புன்னகைத்தபடி தலையாட்டுகின்றனர். இந்த வீடியோ வெளியானதும் நெட்டிசன்களிடையே வைரலானது. அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுபோன்று, பல்வேறு சர்ச்சைக்குரிய பதிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
இதனால், அந்நபருக்கு எதிராக பரவலாக கண்டனங்கள் எழுந்துள்ளன. பலரும் ஜெய்ப்பூர் போலீசாரை டேக் செய்து கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அதில் ஒருவர், இதுபோன்ற காரணங்களால் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள், இந்தியாவில் மிக மோசம் வாய்ந்த அனுபவங்களை எதிர்கொள்கின்றனர். பெண் சுற்றுலாவாசிகளை துன்புறுத்தியதற்காக, இந்த நபரை ஜெய்ப்பூர் போலீசார் கைது செய்ய வேண்டும்.
அவருக்கு, சமூகத்தில் பிறரை மதிப்பது மற்றும் விதிகளை பின்பற்றுவது உள்ளிட்டவற்றை பற்றி உணர்த்த வேண்டும். விருந்தினர் தெய்வத்திற்கு சமம் என்பதற்கான பொருளையும் அவருக்கு கற்பிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
இதற்கு பதிலளித்த போலீசார், அந்நபரை கைது செய்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்து உள்ளனர். அந்த நபர் வெளிநாட்டு சுற்றுலாவாசிகளை கட்டாயப்படுத்தி, தன்னுடைய கடையில் பொருட்களை வாங்க செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.